வாஷிங்டன்: மேற்கு ஆசியாவில் நீடித்து வரும் மோதல் சூழலில், ஈரான் கத்தார் மீது மேலும் தாக்குதல்கள் நடத்தினால் அமெரிக்கா பதிலடி கொடுக்கும் என அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலை மீது ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. ராஸ் லபானில் ஏற்பட்ட மூன்று தீ விபத்துகளில் இரண்டு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக கத்தார் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என கத்தார் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது; தீயை அணைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், ஈரான் மேலும் தாக்குதல் நடத்தினால் அமெரிக்கா பதிலடி கொடுக்கும் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், ஈரானுக்கு நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய தீவிர ராணுவ நடவடிக்கைக்கு உடனடி அனுமதி அளிக்க விரும்பவில்லை என கூறியுள்ளார்.
ஆனால், கத்தாரின் எல்பிஜி ஆலை மீண்டும் குறிவைக்கப்பட்டால் தயங்காமல் நடவடிக்கை எடுப்போம் எனவும் எச்சரித்துள்ளார்.
மேலும், ஈரானின் சவுத் பார்ஸ் எரிவாயு கிடங்கு மீது தாக்குதல்களை இஸ்ரேல் நிறுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஹார்முஸ் ஜலசந்தி மீது ஈரான் கட்டுப்பாட்டை அதிகரித்துள்ளதால், கச்சா எண்ணெய் விலை 5 சதவீதம் உயர்ந்து ஒரு பீப்பாய் 108 டாலரை கடந்துள்ளது.
மோதல் தொடங்கியதிலிருந்து எண்ணெய் விலைகள் 50 சதவீதம் வரை உயர்ந்துள்ளன.
எண்ணெய் நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலையில், வெனிசுலா மீது விதிக்கப்பட்டிருந்த தடைகளை அமெரிக்கா தளர்த்தியுள்ளது.
