சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என அமிர்தாஞ்சன் நிறுவனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மயிலாப்பூரில் லஸ் சர்ச் சாலையில் அமைந்துள்ள 14 கிரவுண்ட் 910 சதுர அடி நிலம், 1901ஆம் ஆண்டு 99 ஆண்டுகள் குத்தகைக்கு வழங்கப்பட்டது. அந்த குத்தகை உரிமை பலரிடம் மாற்றப்பட்டு, இறுதியில் அமிர்தாஞ்சன் நிறுவனத்திடம் சென்றது.
இந்த குத்தகை 2000ஆம் ஆண்டில் முடிவடைந்தாலும், நிறுவனம் அந்த நிலத்தை காலி செய்யவில்லை. இதனால், 2001 மற்றும் 2004ஆம் ஆண்டுகளில் நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டன.
பின்னர், அறநிலையத்துறை சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட குழு, அந்த நிலத்திற்கு மாத வாடகையை ரூ.3.30 லட்சமாக நிர்ணயித்தது. இதை எதிர்த்து அமிர்தாஞ்சன் நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்து, நிலுவை வாடகை தொகையை செலுத்தவும், நிலத்தை காலி செய்யவும் உத்தரவிட்டார்.
இதனை எதிர்த்து நிறுவனம் மேல் முறையீடு செய்தது. இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அடங்கிய அமர்வு, மேல் முறையீட்டை தள்ளுபடி செய்தது.
நீதிமன்றம் தனது உத்தரவில், அமிர்தாஞ்சன் நிறுவனம் அசல் குத்தகைதாரர் அல்ல என்றும், குத்தகை காலம் முடிந்தும் நிலத்தை காலி செய்யாதது தவறு என்றும் குறிப்பிட்டது. மேலும், வாடகை நிர்ணய குழுவின் செயல்முறையில் நிறுவனமும் பங்கேற்ற நிலையில், பின்னர் அதை எதிர்ப்பது ஏற்க முடியாது என்றும் தெரிவித்தது.
கோவில்களின் தினசரி பூஜைகள் மற்றும் பராமரிப்புக்கு இத்தகைய வருமானம் முக்கியமானது என்பதால், நிலத்தை உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
