புதுடில்லி: பார்லிமென்ட் வளாகத்தில் நடந்த போராட்டத்தின் போது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் நடத்தை குறித்து, முன்னாள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட 204 பேர் திறந்த கடிதம் எழுதி கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கடந்த மார்ச் 12ஆம் தேதி, சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை எதிர்த்து பார்லிமென்ட் வளாகத்தில் போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற ராகுல் காந்தி மற்றும் சில எம்.பி.க்கள், பார்லிமென்ட் படிக்கட்டுகளில் அமர்ந்து டீ மற்றும் பிஸ்கட் அருந்திய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து, ஓய்வு பெற்ற அதிகாரிகள், தூதர்கள் மற்றும் சட்ட நிபுணர்கள் இணைந்து வெளியிட்டுள்ள கடிதத்தில், இந்த நடவடிக்கை பார்லிமென்டின் மரியாதையை பாதிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், லோக்சபா சபாநாயகர் தடை விதித்திருந்தும், பார்லிமென்ட் வளாகத்தில் போராட்டம் நடத்தப்பட்டது அதிகாரத்தை புறக்கணிக்கும் செயல் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
எம்.பி.க்கள் பார்லிமென்ட் படிகளில் அமர்ந்து உணவு அருந்துவது, அந்த பதவிக்கு ஏற்ற நடத்தையாக இல்லை என்றும், பார்லிமென்ட் அரசியல் நாடகங்களுக்கு இடமல்ல என்றும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வகையான செயல்கள் ஜனநாயக அமைப்புகளின் கண்ணியத்தை குறைக்கும் என்றும், எம்.பி.க்கள் தங்களது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதனால், இந்த நடத்தைக்கு ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என அந்த 204 பேர் கொண்ட குழு கோரிக்கை வைத்துள்ளது.
