மதுரை: தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் ஆளுங்கட்சி தொழிற்சங்கங்களை சேர்ந்த டிரைவர் மற்றும் கண்டக்டர்களுக்கு இனிமேல் ‘இதர பணி’ என்ற பெயரில் எந்த நிர்வாக பணியும் வழங்கக்கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை மீறினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அரசு போக்குவரத்து கழக மதுரை தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் கனகசுந்தர் 2019ஆம் ஆண்டு பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், மதுரை மண்டல அரசு போக்குவரத்து கழகத்தில் அப்போதைய ஆளுங்கட்சியின் அண்ணா தொழிலாளர் சங்கத்தை சேர்ந்த சில டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் ‘இதர பணி’ என்ற பெயரில் எந்த வேலைவும் செய்யாமல் வருகைப் பதிவு செய்யப்பட்டு சம்பளம் பெற்று வருகின்றனர் என்று கூறப்பட்டது.
மேலும், இவர்களுக்கு சம்பளம் மற்றும் படிகளாக மாதந்தோறும் சுமார் 60 லட்சம் ரூபாய் வழங்கப்படுவதாகவும், கடும் நிதி நெருக்கடியில் இருக்கும் போக்குவரத்து கழகத்திற்கு இது கூடுதல் இழப்பை ஏற்படுத்துவதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டது.
இதனால் ‘இதர பணி’ என்ற பெயரில் வழங்கப்படும் சலுகையை நிறுத்தி, அவர்கள் நியமிக்கப்பட்ட பணியிலேயே ஈடுபடுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதுகுறித்து 2018ஆம் ஆண்டு தமிழக போக்குவரத்துத்துறை கூடுதல் தலைமை செயலர், மதுரை அரசு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குநர் மற்றும் மதுரை மண்டல பொது மேலாளருக்கு மனு அனுப்பியதாகவும், அதை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுதாரர் கோரியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் என். சதீஷ்குமார் மற்றும் எம். ஜோதிராமன் அமர்வு விசாரித்தது.
மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் ராகுல் வாதாடுகையில், இந்த மனு முந்தைய அரசுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்தாலும் தற்போது கூட அதே நிலைமை தொடர்கிறது என்றார். 264 டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் அவர்களுக்கான பணியில் ஈடுபடுத்தப்படாமல் ‘இதர பணி’ என்ற பெயரில் நிர்வாக பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக 2025ஆம் ஆண்டு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
மேலும் ஆளுங்கட்சியுடன் தொடர்புடைய தொழிற்சங்க உறுப்பினர்களே எந்த பணியும் செய்யாமல் சம்பளம் பெற்று வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த அரசு கூடுதல் வழக்கறிஞர் அசோக், இனிமேல் டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் நிர்வாக பணிகளுக்கு பயன்படுத்தப்படமாட்டார்கள் என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கிடைத்த தகவல்கள் டிரைவர் மற்றும் கண்டக்டர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கு ‘இதர பணி’ வழங்கப்பட்டிருப்பதை காட்டுகின்றன என்று கூறப்பட்டது.
அதே நேரத்தில் மதுரை மண்டலத்திலிருந்து பெறப்பட்ட தகவல்களில் 362 காலிப் பணியிடங்களை ‘அவுட்சோர்சிங்’ முறையில் நிரப்ப அனுமதி கோரப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. நிரந்தர பணியாளர்கள் ஏற்கனவே குறிப்பிட்ட பதவிகளில் நியமிக்கப்பட்டிருந்தும் அவர்களை நிர்வாக பணி என்ற பெயரில் இதர பணிகளில் ஈடுபடுத்துவது சரியானது அல்ல என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
ஆட்சியில் உள்ள எந்த அரசியல் கட்சியுடன் தொடர்புடைய தொழிற்சங்கங்களை சேர்ந்த டிரைவர் மற்றும் கண்டக்டர்களுக்கும் இனிமேல் ‘இதர பணி’ என்ற பெயரில் எந்த நிர்வாக பணியும் வழங்கக்கூடாது என்றும், இந்த உத்தரவை மீறினால் எந்த தொழிலாளரும் அல்லது தொழிற்சங்கமும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யலாம் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர் வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
