வாஷிங்டன்: ஈரானின் வான்வெளியை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஒரே வாரத்திற்குள் முழுமையாக கட்டுப்பாட்டில் கொண்டு வர முடியும் என்று அமெரிக்க ராணுவ அமைச்சர் பீட் ஹெக்சேத் தெரிவித்துள்ளார்.
ஈரானின் முக்கிய பகுதிகளை குறிவைத்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் மேற்கொண்டு வரும் தாக்குதல்கள் தற்போது ஐந்தாவது நாளை எட்டியுள்ளன. இருதரப்பிலும் தாக்குதல்கள் தொடர்ந்துவரும் நிலையில் மத்திய கிழக்கு பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இந்த நிலைமை குறித்து பல்வேறு உலக நாடுகள் இரு தரப்பும் பேச்சுவார்த்தை நடத்தி மோதலை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன. எனினும், தற்போது போர் நிறுத்தம் அல்லது பேச்சுவார்த்தைக்கு ஏதுவான சூழ்நிலை உருவாகவில்லை என கூறப்படுகிறது.
இந்த சூழலில் அமெரிக்க ராணுவ அமைச்சர் பீட் ஹெக்சேத் நிருபர்களிடம் கருத்து தெரிவித்தார். ஈரானுக்கு எதிரான இந்த போரில் அமெரிக்கா உறுதியான மற்றும் கருணையற்ற வெற்றியைப் பெறும் என்றும் அவர் கூறினார்.
இந்த நடவடிக்கைக்கு தலைமை தாங்கும் திறன் அமெரிக்காவுக்கு மட்டுமே உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். தற்போது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களின் விளைவுகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், மத்திய கிழக்கு பகுதிக்கு கூடுதல் ராணுவ வீரர்கள் மற்றும் குண்டுவீச்சு விமானங்கள் அனுப்பப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
ஒரு வார காலத்திற்குள் ஈரானின் வான்வெளியை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும் என்றும், போரில் அமெரிக்கா ஏற்கனவே முன்னேற்றம் கண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், தற்போதைய இந்த ராணுவ நடவடிக்கை 2003 ஆம் ஆண்டு ஈராக் மீது அமெரிக்கா நடத்திய படையெடுப்பை விட இரு மடங்கு சக்திவாய்ந்ததாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
இந்த நடவடிக்கை தற்போது தான் தொடங்கியுள்ளதாகவும், இது தொடர்ந்து முன்னேறும் என்றும் அமெரிக்க ராணுவ அமைச்சர் பீட் ஹெக்சேத் தெரிவித்துள்ளார்.
