ஒட்டாவா: ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்டுள்ள தாக்குதல்கள் சர்வதேச சட்டத்திற்கு முரணானவை என கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானுக்கு எதிராக பெரிய அளவில் ராணுவ நடவடிக்கைகளை தொடங்கியுள்ளன. இதற்கு பதிலடியாக ஈரானும் தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் மேற்கு ஆசியப் பகுதியில் பதற்றமான நிலை உருவாகியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக கனடா பிரதமர் மார்க் கார்னி கருத்து தெரிவித்தார். மேற்கு ஆசியாவில் நடைபெற்று வரும் போர் சர்வதேச ஒழுங்கு முறையின் தோல்வியை வெளிப்படுத்தும் மற்றொரு நிகழ்வாக உள்ளது என அவர் கூறினார். மேலும், ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்டுள்ள தாக்குதல்கள் சர்வதேச சட்டங்களுக்கு முரணானவை என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த மோதலை விரைவில் முடிவுக்கு கொண்டு வர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். அந்த இலக்கை அடைய உதவ கனடா தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.
மேலும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் ஐக்கிய நாடுகள் சபையுடனும் தங்களின் நட்பு நாடுகளுடனும் ஆலோசனை நடத்தாமல் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், ஈரானுக்கு ஆதரவாக சீனாவும் முன்பு கருத்து தெரிவித்துள்ளது. ஈரான் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை சீனா வலியுறுத்தியுள்ளது.
இந்த நிலையில், தற்போது கனடா பிரதமரும் மேற்கு ஆசியாவில் நிலவி வரும் மோதலை விரைவில் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.
