கோல்கட்டா: டி-20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் தென் ஆப்ரிக்க அணியை தோற்கடித்து நியூசிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வரும் 10வது டி-20 உலகக் கோப்பை தொடரில் இன்று கொல்கட்டா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் தென் ஆப்ரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்ரிக்க அணியின் தொடக்க வீரர்கள் விரைவாக அவுட்டாகினர். கேப்டன் மார்க்ரம் 18 ரன் எடுத்த நிலையில் வெளியேறினார். குயின்டர் டி காக் 10 ரன்னிலும், ரியான் ரிக்கல்டன் ரன் எதுவும் எடுக்காமல் அவுட்டானார். டேவிட் மில்லர் 6 ரன் எடுத்தார்.
அதன்பின் பிரேவிஸ் 34 ரன்களும், ஸ்டப்ஸ் 29 ரன்களும் எடுத்தனர். மார்கோ ஜான்சன் 55 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். போஸ்ச் 2 ரன்னிலும், ரபாடா 2 ரன்னிலும் அவுட்டானார்கள். இதனால் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு தென் ஆப்ரிக்க அணி 159 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து அணியின் ஹென்றி, மெக்கோன்ஹில் மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதையடுத்து 170 ரன் என்ற இலக்கை நோக்கி நியூசிலாந்து அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய டிம் செய்பெர்ட் மற்றும் பின் ஆலன் இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பின் ஆலன் 33 பந்துகளில் சதம் அடித்து கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்தார். டிம் செய்பெர்ட் 58 ரன்கள் எடுத்து அவுட்டானார். ரச்சின் ரவீந்திரா 13 ரன்கள் எடுத்தார்.
நியூசிலாந்து அணி 12.5 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் அந்த அணி வெற்றி பெற்று டி-20 உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
நாளை (மார்ச் 05) நடைபெறும் இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோத உள்ளன. அந்த போட்டியில் வெற்றி பெறும் அணி, வரும் 8ஆம் தேதி ஆமதாபாத் மைதானத்தில் நடைபெறும் இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொள்ளும்.
