டெஹ்ரான்: போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்காவுடன் எந்த விதமான பேச்சுவார்த்தையும் நடத்தப் போவதில்லை என ஈரான் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
மேற்கு ஆசியாவில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதல்கள் நடத்தி வருகின்றன. அதற்கு பதிலடி நடவடிக்கையாக ஈரானும் பல இடங்களில் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த சூழலில் குவைத்தில் பறந்துகொண்டிருந்த அமெரிக்காவின் எப்–15 போர் விமானத்தை ஈரான் ராணுவம் சுட்டு வீழ்த்தியதாக தகவல்கள் வெளியாகின. தாக்கப்பட்ட அந்த விமானம் செல்போன் கோபுரத்தில் மோதியதாகவும், அதில் இருந்த விமானி உயிர் தப்பியதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில், ஈரான் ராணுவம் ஆயுதங்களை கைவிட்டு சரணடைய வேண்டும் என்றும், இல்லையெனில் கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார். மேலும் ஈரானுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
ஆனால் இந்தக் கருத்தை ஈரானின் உயர் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் அலி லாரி ஜானி மறுத்துள்ளார். அமெரிக்காவுடன் போர் நிறுத்தம் குறித்து எந்த பேச்சுவார்த்தையும் நடத்தமாட்டோம் என அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
இதற்கிடையில் குவைத் மீது ஈரான் மூன்றாவது நாளாக தாக்குதல் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதனால் துபாய், அபுதாபி மற்றும் குவைத் நகரங்களின் விமான நிலையங்களில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
மேலும் ஈரான் ஏவுகணை தாக்குதலால் துபாய், அபுதாபி மற்றும் தோஹா நகரங்களில் வெடிப்பு சத்தங்கள் கேட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதேபோல் சைப்ரஸ் நாட்டில் உள்ள பிரிட்டன் விமானப்படை தளத்தின் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாகவும், இதில் சிறிய அளவில் சேதம் ஏற்பட்டதாக அந்த நாட்டின் அரசு தெரிவித்துள்ளது.
