பீஜிங்: ஈரான் மீது நடத்தப்படும் ராணுவ தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை சீனா வலியுறுத்தியுள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானுக்கு எதிராக பெரிய அளவிலான தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றன. இதற்கு பதிலடியாக ஈரானும் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறது. இதனால் மேற்காசியாவில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இந்த நிலையில், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ, ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சியுடன் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினார். அந்த பேச்சுவார்த்தையின் போது ஈரானில் நிலவும் தற்போதைய சூழ்நிலை குறித்து அராக்சி விளக்கம் அளித்தார்.
இதனைத் தொடர்ந்து சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரானின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை பாதுகாக்க சீனா ஆதரவு அளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உடனடியாக ராணுவ நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்றும், பதற்றத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டும் என்றும் சீனா வலியுறுத்தியுள்ளது.
மேற்காசியாவில் மோதல் மேலும் பரவாமல் தடுக்க அனைத்து தரப்பினரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
