ரியாத்: ஈரான் மேற்கொண்ட ட்ரோன் தாக்குதலால் சவுதி அரேபியாவின் அராம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட சேதங்களை காட்டும் செயற்கைக்கோள் படங்கள் வெளியாகியுள்ளன.
மேற்காசிய நாடான ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து தாக்குதல் நடத்தியதில், அந்நாட்டின் உச்ச தலைவர் கமேனி உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகின.
இதற்கு பதிலடியாக ஈரான், மேற்கு ஆசியாவில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் மற்றும் இஸ்ரேல் தொடர்புடைய இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.
அந்த தாக்குதல்களின் ஒரு பகுதியாக, உலகின் முக்கிய எரிசக்தி மையங்களில் ஒன்றாக கருதப்படும் சவுதி அரேபியாவின் ராஸ் தனுரா பகுதியில் உள்ள அராம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ட்ரோன் தாக்குதலுக்கு உள்ளானது.
இந்த தாக்குதலால் அந்த நிலையத்தின் பல பகுதிகளில் சேதம் ஏற்பட்டுள்ளதாக செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
ராஸ் தனுரா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தினமும் லட்சக்கணக்கான பேரல் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு செய்யப்படுகிறது. தாக்குதலால் ஏற்பட்ட சேதத்தால் அந்நிலையத்தின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேற்காசிய போர் பதற்றம் காரணமாக ஏற்கனவே உலகளாவிய எரிசக்தி சந்தை அழுத்தத்தை சந்தித்து வரும் நிலையில், இந்த தாக்குதல் மேலும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.
