வாஷிங்டன்: ஈரான் ராணுவம் மற்றும் பாதுகாப்பு படைகள் ஆயுதங்களை கைவிட்டு சரண் அடைய வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்கா நடத்திய தாக்குதல்களில் ஈரானின் முக்கிய தலைவர்கள் பலர் கொல்லப்பட்டுள்ளதாக கூறினார். ஈரானுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாகவும், ஆனால் ஈரான் ராணுவம், புரட்சிகர காவல்படை மற்றும் போலீசார் ஆயுதங்களை கீழே வைத்து சரணடைய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அப்படி செய்யாவிட்டால் கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அவர் எச்சரித்தார். உலகின் மிகப்பெரிய தீவிரவாத நாடாக ஈரான் உள்ளது என்றும், அந்த நாட்டின் மக்களுடன் அமெரிக்கா இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
கமேனி உயிரிழந்ததை ஈரான் மக்கள் கொண்டாடியதாகவும், இந்த நடவடிக்கைகள் அமெரிக்கா மற்றும் உலக பாதுகாப்பிற்காக மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறினார்.
மேலும் அணு ஆயுதங்கள் மற்றும் தீவிரவாத ஆட்சியிலிருந்து உலகத்தை பாதுகாப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கம் என்றும் அவர் விளக்கினார்.
கடந்த சில மணிநேரங்களில் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகள் இணைந்து ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகள் உள்ளிட்ட பல முக்கிய இலக்குகளை தாக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
போர் நடவடிக்கைகள் இன்னும் தொடரும் என்றும், அமெரிக்காவின் இலக்குகள் நிறைவேறும் வரை இந்த நடவடிக்கைகள் நிறுத்தப்படமாட்டாது என்றும் டிரம்ப் தெரிவித்தார்.
