ஜெனீவா: சர்வதேச நாணய நிதியத்திடம் பாகிஸ்தான் பெறும் கடனை விட, ஜம்மு-காஷ்மீரின் பட்ஜெட் இரு மடங்கு அதிகம் என ஐநா மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் இந்தியா பதிலளித்தது.
சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் பிப்ரவரி 23ஆம் தேதி தொடங்கிய ஐநா மனித உரிமைகள் கவுன்சில் அமர்வு, மார்ச் 31ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த அமர்வில் ஜம்மு-காஷ்மீர் தொடர்பாக பாகிஸ்தான் முன்வைத்த பல கருத்துகளுக்கு இந்திய பிரதிநிதி அனுபமா சிங் பதிலடி அளித்தார்.
அவர் கூறுகையில், ஜம்மு-காஷ்மீரில் உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சி முன்னேறி வருவதாக தெரிவித்தார். குறிப்பாக, கடந்த ஆண்டு செனாப் ரயில்வே பாலம் திறந்து வைக்கப்பட்டதாகவும், அது உலகின் மிக நீளமான ரயில்வே பாலம் என்ற சாதனையை பெற்றுள்ளதாகவும் கூறினார். செனாப் ரயில்வே பாலம் திறக்கப்படவில்லை என்று கூறுவது, பாகிஸ்தான் கற்பனை உலகில் வாழ்வதைப் போன்றது என அவர் விமர்சித்தார்.
மேலும், ஜம்மு-காஷ்மீரின் 2026-27 நிதியாண்டு பட்ஜெட் ரூ.1.13 லட்சம் கோடி எனவும், இது பாகிஸ்தான் சமீபத்தில் சர்வதேச நாணய நிதியத்திடம் பெற்ற கடனை விட இருமடங்கு அதிகம் எனவும் தெரிவித்தார். பயங்கரவாதம், பொருளாதார சிக்கல் மற்றும் பொதுமக்கள் அதிருப்தி போன்ற பிரச்சினைகளில் சிக்கியுள்ள பாகிஸ்தானை இந்தியா கவனத்தில் கொள்ளத் தேவையில்லை என அவர் கூறினார்.
யார் இந்த அனுபமா சிங்?
இந்திய வெளியுறவுத் துறையில் 9 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறார். இதற்கு முன் கேபிஎம்ஜி நிறுவனத்தில் மூத்த ஆலோசகராக பணியாற்றிய அனுபவம் பெற்றவர். மவுலானா ஆசாத் தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் கணினி அறிவியலில் பி.டெக் முடித்துள்ளார். டில்லி பல்கலையின் மேலாண்மை பிரிவில் எம்பிஏ பைனான்ஸ் பட்டமும் பெற்றுள்ளார்.
