புதுடெல்லி: மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியிலும் இந்தியாவில் 76 நாட்களுக்கு தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளதால் மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் Hardeep Singh Puri தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் – ஈரான் இடையேயான மோதல் காரணமாக உலகளவில் கச்சா எண்ணெய் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. மேலும், முக்கிய கடல் வர்த்தக வழித்தடமான Strait of Hormuz வழியாக கப்பல் போக்குவரத்து பாதிக்கப்படலாம் என்ற அச்சமும் நிலவி வருகிறது.
இந்த நிலையில், மத்திய கிழக்கில் நிலைமை மேலும் மோசமடைந்தாலும் இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இல்லை என்று அமைச்சர் ஹர்தீப்சிங் புரி கூறினார்.
மேலும், எதிர்காலத்தில் எரிபொருள் விலைகள் குறைய வாய்ப்புள்ளதாக நம்பிக்கை தெரிவித்த அவர், தற்போதைய நெருக்கடிகளுக்கு மத்தியிலும் நாட்டின் எந்தப் பகுதியிலும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படவில்லை என்றும் கூறினார்.
இந்தியா தற்போது தனது உள்நாட்டு தேவைகளை பூர்த்தி செய்வதுடன், பெட்ரோலியப் பொருட்களை ஏற்றுமதியும் செய்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
ஹார்மூஸ் ஜலசந்தி தற்காலிகமாக மூடப்பட்டாலும், 30 முதல் 60 நாட்கள் வரை சுத்திகரிப்பு மற்றும் நுகர்வுக்குத் தேவையான பெட்ரோலியப் பொருட்கள் போதுமான அளவில் கையிருப்பில் உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், கச்சா எண்ணெய் விநியோகத்தில் சிக்கல்கள் ஏற்பட்டாலும் அதை சமாளிக்க இந்தியா முழுமையாக தயாராக இருப்பதாகவும், 76 முதல் 80 நாட்கள் வரை நுகர்வோரின் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய அளவுக்கு எரிபொருள் கையிருப்பு உள்ளதாகவும் அவர் கூறினார்.
ஹார்மூஸ் ஜலசந்தி 30 நாட்களுக்கு மூடப்பட்டாலும் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை என்றும், 60 நாட்களுக்கு தேவையான கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு மற்றும் எல்பிஜி கையிருப்பில் இருப்பதாகவும் அவர் விளக்கமளித்தார்.
மேலும், Mozambique நாட்டிலிருந்து கிடைக்கும் கூடுதல் இயற்கை எரிவாயு விநியோகம், இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் என்றும் அமைச்சர் ஹர்தீப்சிங் புரி தெரிவித்தார்.
