புளோரிடா: 50 ஆண்டுகளுக்குப் பிறகு மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் முயற்சியாக, NASA தனது Artemis II விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளது.
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள கேப் கனாவெரலில் அமைந்துள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து சக்திவாய்ந்த ராக்கெட் மூலம் இந்த விண்கலம் ஏவப்பட்டது.
இந்த பயணத்தில் விண்வெளி வீரர்கள் Reid Wiseman, Victor Glover, Christina Koch மற்றும் கனடாவைச் சேர்ந்த Jeremy Hansen ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
இந்த மிஷன், மனிதர்கள் புவியின் குறைந்த வட்டப்பாதையைத் தாண்டி செல்லும் 50 ஆண்டுகளுக்குப் பிறகான முதல் பயணமாகும். சுமார் 10 நாட்கள் நீடிக்கும் இந்த பயணத்தில், விண்வெளி வீரர்கள் நிலவைச் சுற்றி வந்து மீண்டும் பூமிக்கு திரும்ப உள்ளனர்.
விண்கலத்தில் உள்ள Orion spacecraft அமைப்புகள் முதற்கட்டமாக பூமியின் உயர் வட்டப்பாதையில் சோதனை செய்யப்படும். பின்னர், நிலவின் பின்புறம் சென்று, அதன் ஈர்ப்பு விசையை பயன்படுத்தி மீண்டும் பூமியை நோக்கி திரும்பும்.
பூமியின் வளிமண்டலத்திற்குள் மணிக்கு சுமார் 40,000 கி.மீ வேகத்தில் நுழையும் இந்த விண்கலம், இறுதியாக பசிபிக் பெருங்கடலில் தரையிறங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
