சென்னை: பசிபிக் பெருங்கடலில் 50 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் ‘சூப்பர் எல் நினோ’ நிகழ்வு காரணமாக, இந்தியாவில் தென்மேற்கு பருவமழை குறையும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடலில் ஏற்படும் வெப்பநிலை மாற்றங்கள் உலகளாவிய வானிலை மாற்றங்களுக்கு காரணமாகும். அந்த வகையில், பசிபிக் பெருங்கடலின் கிழக்கு மற்றும் மத்திய பகுதிகளில் வெப்பநிலை அதிகரிப்பது ‘எல் நினோ’ என்றும், குறைவது ‘லா நினா’ என்றும் அழைக்கப்படுகிறது.
தற்போது நிலவி வரும் லா நினா நிலைமை வலுவிழந்து வருவதால், இந்த ஆண்டில் எல் நினோ உருவாகும் சாத்தியம் உள்ளது. இதனுடன் தொடர்பாக, இந்திய பெருங்கடலில் ‘ஐ.ஓ.டி.’ எனப்படும் வெப்பநிலை மாற்றமும் ஏற்படலாம் என்று இந்திய வானிலை துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து தன்னார்வ வானிலை ஆய்வாளர் ஹேமசந்தர் கூறுகையில், வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் எல் நினோ உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார். பொதுவாக எல் நினோ காலங்களில் கடல் வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸ் வரை உயர்வது வழக்கம்.
ஆனால், இந்த முறை 50 ஆண்டுகளுக்கு பின் ‘சூப்பர் எல் நினோ’ உருவாக இருப்பதால், வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதன் தாக்கமாக, சுமத்ரா தீவுகள் முதல் சோமாலியா வரை உள்ள பகுதிகளில் இந்திய பெருங்கடலில் வெப்பநிலை அதிகரிக்கும். இந்த நிகழ்வு அக்டோபர்-நவம்பர் மாதங்களில் ஏற்பட்டால், அடுத்த ஆண்டு முதல் தென்மேற்கு பருவமழை பெருமளவில் குறையக்கூடும்.
இதனால், தமிழகத்துக்கு நீர் வரத்து பாதிக்கப்படுவதுடன், பல மாநிலங்களில் வறட்சி போன்ற நிலை உருவாக வாய்ப்புள்ளது.
அதே நேரத்தில், வடகிழக்கு பருவமழை காலத்தில் 2015ஆம் ஆண்டு போல் அதிக மழை பெய்யும் சாத்தியமும் உள்ளது. மேலும், 2027ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து சில ஆண்டுகள் வறட்சி பாதிப்பு அதிகரிக்கலாம் என்றும் அவர் எச்சரித்தார்.
