தமிழகத்தில் காலியாக உள்ள ஐந்து சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏற்பாடுகளை உடனடியாக தொடங்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சமீபத்திய சட்டசபை தேர்தலில் முதல்வர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் வெற்றி பெற்றார். பின்னர் அவர் திருச்சி கிழக்கு தொகுதி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததால், அந்தத் தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டது.
அதேபோல், பெருந்துறை, மதுராந்தகம், தாராபுரம் மற்றும் அம்பாசமுத்திரம் தொகுதிகளில் வெற்றி பெற்ற அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். இதனால் அந்த நான்கு தொகுதிகளும் காலியாகின.
இதன் மூலம் மொத்தம் ஐந்து சட்டசபை தொகுதிகள் காலியாக உள்ள நிலையில், அங்கு இடைத்தேர்தல் நடத்துவதற்கான முன்னேற்பாட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக திருச்சி, ஈரோடு, செங்கல்பட்டு, திருப்பூர் மற்றும் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கடிதம் அனுப்பியுள்ளார்.
மேலும், இந்த ஐந்து தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், தேர்தல் தொடர்பான நிர்வாக நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
