புதுடில்லி: தமிழக அரசியல் நிலவரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் ஆலோசனை நடத்தியதாகவும், அடுத்த 4 நாட்களில் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பான விவரங்கள் வெளியாகும் என்றும் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தெரிவித்துள்ளார்.
டில்லியில் அமித்ஷாவை சந்தித்த பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர், கூட்டணியில் புதிய கட்சிகள் சேரும் வாய்ப்பு இல்லை என்றும், தற்போது உள்ள கட்சிகளுடன் தேர்தலை எதிர்கொள்ள உள்ளதாகவும் கூறினார்.
மேலும், பாமக தலைவர் அன்புமணி மற்றும் அமமுக தலைவர் தினகரன் ஆகியோரும் டில்லிக்கு வந்து அரசியல் ஆலோசனைகளில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தார்.
தொகுதி பங்கீடு தொடர்பாக பேச மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மார்ச் 21 அன்று சென்னை வருவதாகவும், அடுத்த 4 நாட்களில் அனைத்து முடிவுகளும் வெளிவரும் என்றும் இபிஎஸ் கூறினார்.
கூட்டணி பேச்சுவார்த்தைகள் அமைதியாகவும் சுமூகமாகவும் நடைபெற்று வருவதாகவும், வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ள தொகுதிகள் அந்தந்த கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் என்றும் அவர் விளக்கம் அளித்தார்.
அதிமுக 31 ஆண்டுகள் ஆட்சி அனுபவம் கொண்ட கட்சி என்பதால் தேர்தலை எதிர்கொள்ளும் அனுபவமும் நம்பிக்கையும் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
திமுக ஆட்சியை விமர்சித்த அவர், கடந்த 5 ஆண்டுகளில் புதிய திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்படவில்லை என்றும், சட்டம்-ஒழுங்கு நிலைமை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.
மேலும், அதிமுக தேர்தல் அறிக்கை ஒரு வாரத்தில் வெளியிடப்படும் என்றும், கட்சி ஏற்கனவே தீவிர பிரசாரத்தை தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்தார். தேர்தலில் வெற்றி பெறும் வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகவும் இபிஎஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
