இஸ்லாமாபாத்: ஆப்கானிஸ்தானின் நிலப்பரப்பை பயன்படுத்தி பாகிஸ்தானுக்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கைகள் நடைபெற அனுமதிக்க மாட்டோம் என பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கு இடையே சமீப காலமாக பதற்றம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP) அமைப்புக்கு ஆப்கானிஸ்தான் ஆதரவு வழங்குகிறது என்ற குற்றச்சாட்டை பாகிஸ்தான் முன்வைத்து வருகிறது.
இந்த நிலையில், ராவல்பிண்டியில் ஷியா முஸ்லிம் மதகுருமார்களை சந்தித்த பின்னர் பேசிய அசிம் முனீர், பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்படுகின்றன என்றார்.
‘கஜப் லில் ஹக்’ என்ற பெயரில் கடந்த மாதம் தொடங்கப்பட்ட ராணுவ நடவடிக்கையின் மூலம், பாகிஸ்தானுக்கு எதிராக செயல்படும் பயங்கரவாத குழுக்களையும், அவர்களின் கட்டமைப்புகளையும் முற்றிலும் அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
மேலும், ஆப்கானிஸ்தான் தன் நிலப்பரப்பை பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதற்கிடையில், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, சவுதி அரேபியா, துருக்கி மற்றும் கத்தார் நாடுகளின் கோரிக்கையை தொடர்ந்து, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான மோதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
சமீபத்தில் காபூலில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 400 பேர் உயிரிழந்ததாக ஆப்கானிஸ்தான் அரசு குற்றஞ்சாட்டியுள்ள நிலையில், இந்த பதற்றம் மேலும் தீவிரமடைந்துள்ளது.
