ஹைதராபாத்: ஆந்திராவில் 3வது குழந்தை பெற்ற தம்பதிகளுக்கு ரூ.30 ஆயிரமும், 4வது குழந்தை பெற்றுக் கொண்டால் ரூ.40 ஆயிரமும் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் N. Chandrababu Naidu அறிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலத்தில் குறைந்து வரும் பிறப்பு விகிதம் மற்றும் அதிகரித்து வரும் முதியோர் மக்கள்தொகை போன்ற சவால்களை எதிர்கொள்ளும் வகையில், மக்கள்தொகை மேலாண்மை கொள்கையை அரசு அமல்படுத்தி வருகிறது. இந்த கொள்கையின் கீழ், அதிக குழந்தைகள் பெற்றெடுக்கும் தம்பதிகளுக்கு பல்வேறு நிதியுதவிகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
அதன் தொடர்ச்சியாக, 3வது குழந்தை பெற்ற தம்பதிகளுக்கு ரூ.30 ஆயிரமும், 4வது குழந்தை பெற்ற தம்பதிகளுக்கு ரூ.40 ஆயிரமும் ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
ஸ்ரீகாகுளம் மாவட்டம் நரசன்னபேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியபோது, “பிறப்பு விகிதத்தை உயர்த்த நமது சமூகம் ஒன்றிணைய வேண்டிய நேரம் வந்துவிட்டது. நான் ஒரு புதிய அறிவிப்பை வெளியிடுகிறேன். 3வது குழந்தை பிறந்தால் உடனடியாக ரூ.30 ஆயிரம், 4வது குழந்தை பிறந்தால் ரூ.40 ஆயிரம் வழங்குவோம்” என்று கூறினார்.
இதற்கு முன்பு கடந்த மார்ச் 5ஆம் தேதி சட்டசபையில் உரையாற்றிய சந்திரபாபு நாயுடு, 2வது குழந்தை பெற்ற தம்பதிகளுக்கும் ரூ.25 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்குவது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக தெரிவித்திருந்தார்.
