ஜம்மு: ஜம்மு-காஷ்மீரில் போதைப் பொருள் கடத்தல் மற்றும் அதனுடன் தொடர்புடைய பயங்கரவாத செயல்பாடுகளுக்கு எதிராக போலீசார் மேற்கொண்ட தீவிர நடவடிக்கையில், கடந்த 50 நாட்களில் மட்டும் 341 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், 1,000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
யூனியன் பிரதேசமான ஜம்மு-காஷ்மீரில், முதல்வர் ஒமர் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாட்டு கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, போதைப் பொருள் கடத்தல் மற்றும் அதனுடன் தொடர்புடைய பயங்கரவாத வலையமைப்புகளை ஒடுக்க கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தார்.
இதையடுத்து, “போதைப் பொருள் இல்லாத ஜம்மு-காஷ்மீர்” என்ற பெயரில் ஏப்ரல் 11 முதல் மே 29 வரை மாநிலம் முழுவதும் விரிவான சோதனை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
போலீசார் வெளியிட்ட தகவலின்படி, இந்த 50 நாள் சிறப்பு நடவடிக்கையின் போது 923 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றின் அடிப்படையில் 1,018 போதைப் பொருள் கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் 55 பேர் போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கைகளில் 341 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் மட்டும் சுமார் ரூ.120 கோடி மதிப்புள்ள 12 கிலோ ஹெராயின் அடங்கும். கூடுதலாக, மனநல பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய 23,752 மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டன.
மேலும், போதைப் பொருள் கடத்தலுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் ரூ.200 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. அதேபோல், 63 சட்டவிரோத சொத்துகள் இடிக்கப்பட்டுள்ளன.
மருந்து விற்பனை விதிமுறைகளை மீறியதற்காக 120 மருந்தக உரிமங்கள் ரத்து செய்யப்பட்டன. அதோடு, 668 பேரின் ஓட்டுநர் உரிமங்களும், 13 வாகனங்களின் பதிவுச் சான்றிதழ்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதைப் பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 124 பேரின் பாஸ்போர்ட்டுகளை பறிமுதல் செய்ய அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளனர். மேலும், போதைப் பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் 6,881 கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன.
பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் சுற்றுவட்டார பகுதிகளில் கண்காணிப்பு மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
