ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் குரூப் சுற்றில் நடைபெற்ற போட்டியில், நார்வே அணியை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பிரான்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியில் ஓஸ்மானே டெம்பேலே ஹாட்ரிக் கோல்கள் அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.
போஸ்டனில் நடைபெற்ற இந்தப் போட்டியில், இரு அணிகளும் ஏற்கனவே நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றிருந்த நிலையில், குரூப்பில் முதலிடம் பிடிக்கும் நோக்கில் களமிறங்கின. மேலும், கிலியன் எம்பாப்பே மற்றும் எர்லிங் ஹாலண்ட் மோதும் போட்டி என்பதால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு நிலவியது.
ஆட்டத்தின் 13, 18 மற்றும் 45-வது நிமிடங்களில் அடுத்தடுத்து கோல்கள் அடித்த டெம்பேலே, வெறும் 32 நிமிடங்களில் ஹாட்ரிக் சாதனை படைத்தார். இதன் மூலம் உலகக்கோப்பை வரலாற்றில் இரண்டாவது அதிவேக ஹாட்ரிக் கோலை பதிவு செய்த வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.
நார்வே அணிக்காக 42-வது நிமிடத்தில் தெலோ ஆஸ்கார்ட் ஒரு கோல் அடித்தார். இரண்டாவது பாதியில் நார்வேக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தபோதும், ஜோர்கன் ஸ்ட்ராண்ட் அதை கோலாக்கத் தவறினார்.
போட்டியின் கூடுதல் நேரத்தில் டெசிரே டூயே மேலும் ஒரு கோல் அடித்ததன் மூலம் பிரான்ஸ் 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 1998-ஆம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற பிறகு, குரூப் சுற்றின் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்ற முதல் முறையாக இந்த சாதனையை பிரான்ஸ் பதிவு செய்துள்ளது.
