தேசிய ஜனநாயக கூட்டணி (என்.டி.ஏ.) ஆட்சியின் 12 ஆண்டுகால பயணத்தில் 25 கோடிக்கும் அதிகமான மக்களை வறுமையிலிருந்து மீட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில், பாஜக கூட்டணி ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள், யூனியன் பிரதேச தலைவர்கள் மற்றும் தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் பிரதமராக 12 ஆண்டுகள் நிறைவு செய்த மோடிக்கு கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.
பின்னர் உரையாற்றிய பிரதமர் மோடி, “இந்த நாளை மறக்க முடியாத நாளாக மாற்றியுள்ளீர்கள். எனது அரசியல் பயணத்தில் பல ஏற்றத் தாழ்வுகளை சந்தித்திருந்தாலும், இந்த மைல்கல்லை எட்டுவேன் என்று ஒருபோதும் நினைத்ததில்லை” என்றார்.
மேலும், “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராக நீண்ட காலம் பணியாற்றுவது மிகப்பெரிய பாக்கியம். பாரத மாதாவுக்கு இவ்வளவு காலம் சேவை செய்வது இறைவனின் அருளால் மட்டுமே சாத்தியம். மக்கள் தான் கடவுளின் வடிவம்” என்றும் குறிப்பிட்டார்.
இந்த சாதனை தனிப்பட்டதல்ல என்றும், தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள அனைத்து கட்சிகளுக்கும் இதில் பங்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். “இது ஒரு கூட்டுச் சாதனை. கூட்டணியில் உள்ள ஒவ்வொரு தொண்டருக்கும் இந்த சாதனையை சமர்ப்பிக்கிறேன்” என்று மோடி கூறினார்.
காங்கிரஸ் ஆட்சிக் காலத்தை விமர்சித்த அவர், “நாட்டின் வளர்ச்சி மெதுவாகவே இருக்கும் என்ற மனநிலையை காங்கிரஸ் உருவாக்கியது. வளர்ச்சி, நல்ல நிர்வாகம் மற்றும் தீர்க்கமான முடிவெடுக்கும் திறனில் அவர்கள் தோல்வியடைந்தனர்” என்றார்.
மேலும், முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான என்.டி.ஏ. ஆட்சிக் காலத்தில்தான் வளர்ச்சிக்கான புதிய பாதை உருவானதாகவும், பின்னர் மக்கள் மீண்டும் என்.டி.ஏ. மீது நம்பிக்கை வைத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
“கடந்த 12 ஆண்டுகளில் 25 கோடிக்கும் அதிகமான மக்கள் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். இது எங்களின் கொள்கைகளும் செயல்பாடுகளும் சரியான பாதையில் உள்ளதை காட்டுகிறது” என்று பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.
மேலும், “வளர்ச்சி அடைந்த இந்தியா என்பது அரசு அல்லது அரசியல் கட்சிகளின் கனவு மட்டுமல்ல. ஒவ்வொரு இந்திய குடிமகனின் கனவாக அது மாறியுள்ளது. அந்த இலக்கை அடைய நாம் அனைவரும் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தினார்.
