24 மணிநேரத்தில் துவங்கும் தென்மேற்கு பருவமழை: 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
சென்னை: தெற்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை துவங்க உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. வழக்கத்தை விட 5 நாட்களுக்கு முன்பாகவே பருவமழை துவங்குவது குறிப்பிடத்தக்கது.
சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்ந்து அதே பகுதியில் நிலவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் இன்று (மே 15) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
நாளை (மே 16) விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மே 17ஆம் தேதி திண்டுக்கல், தேனி, கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல பகுதிகளில் மிதமான மழை தொடரக்கூடும் என்றும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் மீனவர்களுக்கான எச்சரிக்கையாக, வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் மே 15 முதல் மே 18 வரை மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்றும், இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீச வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
