செய்தி
மதுரை: திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோவில் உள்ளிட்ட கோவில்களில் அறப்பணிகள் மேற்கொள்வதற்காக உருவாக்கப்பட்ட அறக்கட்டளைக்கு சொந்தமானதாக கூறப்படும் நிலம் தொடர்பான ஆவணங்களை பதிவு செய்வதற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டித்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
21 ஏக்கர் நிலம் தொடர்பான வழக்கு
மதுரை மாவட்டம் நெடுங்குளத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், திருச்சி ஸ்ரீரங்கம் திம்மராயசமுத்திரத்தில் 21 ஏக்கர் 6 சென்ட் நிலம் ஒரு அறக்கட்டளைக்கு சொந்தமானது எனக் குறிப்பிட்டிருந்தார்.
ஸ்ரீரங்கநாத சுவாமி கோவில் உள்ளிட்ட சில கோவில்களில் அறப்பணிகள் மேற்கொள்வதற்காக இந்த அறக்கட்டளை உருவாக்கப்பட்டதாகவும், சுமார் ரூ.600 கோடி மதிப்புள்ள சொத்தை சிலர் அபகரிக்க முயற்சிப்பதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
நிலம் பதிவு செய்ய ஏற்கனவே தடை
இந்த வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, கடந்த செப்.3-ம் தேதி இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது.
அதன்படி, சம்பந்தப்பட்ட நிலத்தின் முழுப் பகுதியையோ அல்லது அதன் சிறு பகுதியையோ தொடர்புபடுத்தி, மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை எந்தவித ஆவணப் பதிவையும் மேற்கொள்ளக்கூடாது என சம்பந்தப்பட்ட சார்-பதிவாளருக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.
தடையை நீக்க கோரிக்கை
இந்த இடைக்கால தடையை விலக்கக் கோரி ரங்கசாமி, சித்ரா மற்றும் வாசுதேவானந்த் ரங்கசாமி ஆகியோர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி சி.வி.கார்த்திகேயன் அடங்கிய அமர்வு, இந்த விவகாரம் சிவில் பிரச்னையாக இருக்கும்போது, அதை எவ்வாறு பொதுநல வழக்காக கருத முடியும் என கேள்வி எழுப்பியது.
அரசு தரப்பு வாதம்
தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், அறக்கட்டளைக்கு சொந்தமான நிலத்தை அறப்பணிகளுக்காக மட்டுமே பயன்படுத்த முடியும் என்றும், அதை விற்பனை செய்ய முடியாது என்றும் வாதிட்டார்.
மேலும், நிலம் சட்டவிரோதமாக ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
எதிர்தரப்பு விளக்கம்
ரங்கசாமி உள்ளிட்டோர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராமன், தங்கள் தரப்பினரே அந்த சொத்தின் உரிமையாளர்கள் என வாதிட்டார்.
மேலும், மனுதாரர் குறிப்பிட்ட சொத்து முழுமையாக கோவிலுக்கு தானமாக வழங்கப்படவில்லை என்றும், அந்த சொத்திலிருந்து கிடைக்கும் வருவாயை கோவில் திருப்பணிகளுக்கு பயன்படுத்தலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
நவ.5-ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு
இந்த வழக்கில் அறநிலையத்துறை கமிஷனர், இணை கமிஷனர், ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோவில் செயல் அலுவலர் மற்றும் பதிவுத்துறை ஐ.ஜி. ஆகியோர் 2 வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அதன் பின்னர் மனுதாரர் தரப்பும் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தினர்.
வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை நவம்பர் 5-ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், அதுவரை நிலம் தொடர்பான ஆவணப் பதிவுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள இடைக்கால தடையை நீட்டித்து உத்தரவிட்டனர்.
