செய்தி
சென்னை: பட்டினப்பாக்கம் மற்றும் நீலாங்கரை கடற்கரைகளில் அடுத்த ஆண்டு முதல் விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதி வழங்கப்படாது என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வில் தமிழக அரசு உறுதியளித்துள்ளது.
பசுமைத் தீர்ப்பாயத்தில் மனு
சென்னை புதுப்பேட்டையைச் சேர்ந்த ஹரிஹரன், அறிவிக்கப்படாத நீர்நிலைகளில் விநாயகர் சிலைகளை கரைப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி கடந்த 2023-ம் ஆண்டு தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு தொடர்பாக, சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பட்டினப்பாக்கம் மற்றும் நீலாங்கரை கடற்கரைகளில் சிலைகளை கரைக்க அனுமதிக்க இயலாது என தீர்ப்பாயம் தெரிவித்திருந்தது.
மேலும், இந்த இரு பகுதிகளிலும் கரைக்கப்பட வேண்டிய சிலைகளை சென்னையில் உள்ள மற்ற 4 அனுமதிக்கப்பட்ட இடங்களுக்கு மாற்றுவது தொடர்பாக தமிழக அரசின் கருத்தை தெரிவிக்கவும் உத்தரவிடப்பட்டிருந்தது.
சிலைகளை மாற்றுவதில் நடைமுறை சிக்கல்கள்
இந்த வழக்கு நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்யநாராயணா மற்றும் தொழில்நுட்ப உறுப்பினர் பிரசாந்த் கார்கவா தலைமையிலான அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது சென்னை மாநகராட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், நீலாங்கரை மற்றும் பட்டினப்பாக்கம் பகுதிகளில் கரைக்கப்படவிருந்த சிலைகளை மற்ற 4 பகுதிகளுக்கு மாற்றுவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
சிலைகளை மாற்றுவதில் சட்டம்-ஒழுங்கு, போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
700 சிலைகள் மாற்றம்
மேலும், பாலவாக்கம் கடற்கரையில் கரைக்கப்படவிருந்த 450 விநாயகர் சிலைகளை கோவளம் பகுதிக்கும், பட்டினப்பாக்கம் கடற்கரையில் கரைக்கப்படவிருந்த 250 சிலைகளை எண்ணூர் பகுதிக்கும் மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இதன் மூலம் மொத்தம் 700 சிலைகள் மாற்று இடங்களுக்கு அனுப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு முதல் அனுமதி இல்லை
இந்நிலையில், அடுத்த ஆண்டு முதல் பட்டினப்பாக்கம் மற்றும் நீலாங்கரை கடற்கரை பகுதிகளில் விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதி வழங்கப்படாது என்று தமிழக அரசு தரப்பில் பசுமைத் தீர்ப்பாயத்தில் உறுதியளிக்கப்பட்டது.
இதையடுத்து, தமிழக அரசு சார்பில் பிரமாணப்பத்திரத்தை செப்டம்பர் 17-ம் தேதி தாக்கல் செய்ய தீர்ப்பாயம் உத்தரவிட்டது. வழக்கின் அடுத்தகட்ட விசாரணை பின்னர் நடைபெற உள்ளது.
