கோவை: இந்தியா 2047-ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடாக மட்டுமல்லாமல், உலகிற்கே வழிகாட்டியாக உருவெடுக்கும் என்று துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கோவை குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஜி.கே.என்.எம். செவிலியர் கல்லூரியின் புதிய வளாகத்தை திறந்து வைத்து அவர் பேசியபோது, நாட்டில் செவிலியர் கல்லூரிகளில் அதிகளவில் மாணவர்கள் சேர்ந்து வருவது, மக்களிடையே சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்திருப்பதற்கான முக்கிய அடையாளம் என்று குறிப்பிட்டார்.
உடலுறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வும் கடந்த சில ஆண்டுகளில் கணிசமாக உயர்ந்துள்ளதாக தெரிவித்த அவர், தானமாக வழங்கப்படும் உறுப்புகள் மூலம் பலருக்கு புதிய வாழ்க்கை கிடைப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக கூறினார்.
மேலும், கண் மருத்துவர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு பயிற்சி அளித்தல், மருத்துவ உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் மற்றும் நவீன மருத்துவ உபகரணங்களை வாங்குதல் உள்ளிட்ட பணிகளுக்கு மத்திய அரசு தொடர்ந்து நிதியுதவி வழங்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மருத்துவத் துறையில் இந்தியா தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வருவதாகக் குறிப்பிட்ட துணை ஜனாதிபதி, 2047-ஆம் ஆண்டில் நாடு வளர்ந்த தேசமாக மாறுவதுடன், மருத்துவத் துறையிலும் உலகிற்கு வழிகாட்டும் பல்வேறு சாதனைகளை படைக்கும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர், குப்புசாமி நாயுடு அறக்கட்டளை தலைவர் கோபிநாத், துணைத் தலைவர் சஞ்சய் ஜெயவர்த்தனவேலு, ஜி.கே.என்.எம். மருத்துவமனை முதன்மை செயல் அதிகாரி ரகுபதி வேலுசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
