நாக்பூர்: 100 சதவீதம் எத்தனால் எரிபொருளைப் பயன்படுத்தி வாகனங்களை இயக்குவதற்கு மத்திய அரசு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கியுள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
இந்தியா ஆண்டுதோறும் சுமார் ரூ.22 லட்சம் கோடி மதிப்பிலான கச்சா எண்ணெயை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வருகிறது. இந்த இறக்குமதி செலவைக் குறைக்கும் நோக்கில், பெட்ரோலுக்கு மாற்றாக எத்தனால் பயன்பாட்டை மத்திய அரசு தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது.
கரும்பு, சோளம் உள்ளிட்ட பயிர்களின் கழிவுப் பொருட்களிலிருந்து தயாரிக்கப்படும் எத்தனால், சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்று எரிபொருளாக கருதப்படுகிறது. உலகின் பல நாடுகளில் எரிபொருளுடன் எத்தனால் கலக்கும் நடைமுறை விரிவடைந்து வரும் நிலையில், இந்தியாவிலும் ஆரம்பத்தில் 5 முதல் 10 சதவீதம் வரை எத்தனால் கலக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. பின்னர் அது 20 சதவீதம் வரை உயர்த்தப்பட்டது.
இதன் அடுத்த கட்டமாக, சமீபத்தில் ‘பிளெக்ஸ்-ப்யூல்’ தொழில்நுட்பம் கொண்ட வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த வகை வாகனங்களில் 85 சதவீதம் எத்தனால் கலந்த E85 எரிபொருள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கான முதல் பிரத்யேக எரிபொருள் நிரப்பு நிலையமும் கடந்த வாரம் டெல்லியில் திறக்கப்பட்டது.
இந்நிலையில், பெட்ரோல் இல்லாமல் முழுமையாக 100 சதவீதம் எத்தனால் எரிபொருளைப் பயன்படுத்தி வாகனங்களை இயக்குவதற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார். இந்த நடவடிக்கை கச்சா எண்ணெய் இறக்குமதி செலவைக் குறைப்பதோடு, உள்நாட்டு மாற்று எரிபொருள் பயன்பாட்டையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
