பீஜிங்,
சீனாவில் உயிரிழந்த ஒருவரின் கல்லறைக்கு அருகே, அவருக்குப் பிடித்ததாக கூறப்படும் ₹1.5 கோடி மதிப்புள்ள Mercedes-Benz கார் புதைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லியோனிங் மாகாணத்தின் வாகோவ் பகுதியில் 70 வயதான செல்வந்தர் ஒருவர் சமீபத்தில் உயிரிழந்தார். அவருக்கு சொகுசு கார்கள் மீது அதிக விருப்பம் இருந்ததாக கூறப்படுகிறது.
இதனால், அவரை அடக்கம் செய்த கல்லறைக்கு அருகில் கூடுதல் குழி தோண்டி, அவருக்குப் பிடித்த மெர்சிடிஸ் பென்ஸ் காரை குடும்பத்தினர் பாரம்பரிய நம்பிக்கையின் அடிப்படையில் புதைத்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வேகமாக பரவியது.
இதனை பார்த்த பலர், பொருளாதார சிக்கல்கள் உள்ள நிலையில் இவ்வளவு உயர்ந்த மதிப்புள்ள காரை புதைப்பது வீண் செலவாகும் என்றும், இது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்றும் விமர்சித்தனர்.
அதே நேரத்தில், சிலர் இதை மரியாதை செலுத்தும் ஒரு வழியாகவும் பார்த்தாலும், மிகையான ஆடம்பரம் எனவும் கருத்து தெரிவித்தனர்.
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக மாறியதால், சம்பந்தப்பட்ட குடும்பத்தினரிடம் சீன அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
விசாரணைக்குப் பிறகு, இந்த செயல் மூடநம்பிக்கையை ஊக்குவிப்பதாக கூறி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். மேலும், குடும்பத்தினரிடம் பொது மன்னிப்பு கோரச் செய்துள்ளனர்.
சுற்றுச்சூழல் பாதிப்பு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அபராதம் விதிக்கவும் சீன அரசு முடிவு செய்துள்ளது.
