என்.சி.இ.ஆர்.டி. 9ஆம் வகுப்பு வரலாறு பாடப்புத்தகத்தில் ‘ஸ்வஸ்திகா’ சின்னம் தொடர்பாக தவறான சித்தரிப்பு இடம்பெற்றுள்ளதாகக் கூறி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவில், மத்திய அரசுக்கும் என்.சி.இ.ஆர்.டி. நிர்வாகத்திற்கும் நோட்டீஸ் அனுப்ப மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த மகாலிங்கம் பாலாஜி தாக்கல் செய்த மனுவில், ஜெர்மனியின் நாஜி ஆட்சியாளர் Adolf Hitler பயன்படுத்திய ‘ஹாக்கன்குரூஸ்’ (Hooked Cross) சின்னம் மற்றும் இந்து, பௌத்த, சமண மதங்களில் புனிதமாகக் கருதப்படும் ‘ஸ்வஸ்திகா’ சின்னம் இரண்டும் வேறுபட்டவை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மனுவில், என்.சி.இ.ஆர்.டி. 9ஆம் வகுப்பு வரலாறு பாடப்புத்தகத்தில் நாஜி சின்னத்தை குறிப்பிடும் இடத்தில் ‘ஹாக்கன்குரூஸ்’ என்ற சொல்லுக்குப் பதிலாக ‘ஸ்வஸ்திகா’ பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், இது மாணவர்களிடையே தவறான புரிதலை ஏற்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ‘ஸ்வஸ்திகா’ சின்னம் அமைதி, நன்மை மற்றும் மங்களத்தை குறிக்கும் மதச் சின்னமாக இருப்பதால், அதை நாஜி சின்னத்துடன் தொடர்புபடுத்துவது அரசியலமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள சமத்துவம் மற்றும் மதச்சுதந்திரக் கொள்கைகளுக்கு எதிரானதாகும் என்றும் மனுதாரர் வாதிட்டுள்ளார்.
எனவே, என்.சி.இ.ஆர்.டி. பாடப்புத்தகத்தில் ‘ஸ்வஸ்திகா’ மற்றும் ‘ஹாக்கன்குரூஸ்’ ஆகியவற்றுக்கிடையேயான வேறுபாட்டை தெளிவாக விளக்கும் வகையில் திருத்தம் செய்ய வேண்டும் என்றும், நாஜி சின்னத்திற்கான சரியான பெயராக ‘ஹாக்கன்குரூஸ்’ என்பதையே பயன்படுத்த வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் என். சதீஷ்குமார் மற்றும் எம். ஜோதிராமன் அமர்வு, மத்திய பள்ளிக் கல்வித்துறை செயலர் மற்றும் NCERT இயக்குநருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கை ஜூலை 13ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
