டெல் அவிவ்: மத்திய கிழக்கு பகுதிகளில் போர் காரணமாக பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் பேசியதாகவும், அவரது ஆதரவுக்கு நன்றி தெரிவிப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் தாக்குதல் நடத்தி வரும் சூழலில் மத்திய கிழக்கு முழுவதும் பதற்றம் நிலவி வருகிறது. இந்த நிலைமை குறித்து இந்தியாவில் பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
இதனைத் தொடர்ந்து, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு தற்போதைய நிலைமைகள் குறித்து பேச்சு நடத்தினார். அப்போது பிராந்தியத்தில் நிலவும் சூழல் குறித்து இந்தியாவின் கவலைகளை மோடி தெரிவித்துள்ளார்.
மேலும் பொதுமக்களின் பாதுகாப்பு முக்கியம் என்பதை வலியுறுத்திய அவர், மோதல்களை விரைவில் நிறுத்த வேண்டும் என்பதையும் குறிப்பிட்டார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த நெதன்யாகு, தனது நல்ல நண்பரான பிரதமர் மோடியுடன் நீண்ட நேரம் பேசினதாகவும், இஸ்ரேலுக்கு ஆதரவாக இருந்து உண்மைக்காக துணை நிற்பதற்கு நன்றி தெரிவித்ததாகவும் கூறினார்.
