“அதிமுகவை அழிக்க விஜய் முயற்சி” – தினகரன் குற்றச்சாட்டு
சென்னை: “அதிமுகவை அழிக்க முதல்வர் விஜய் முயற்சி செய்கிறார்” என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி மற்றும் தற்போதைய அரசியல் சூழல் குறித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்தார்.
அப்போது, “தமிழக சட்டசபை தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற த.வெ.க, தனிப்பெரும்பான்மை இல்லாமல் பல முயற்சிகள் மூலம் ஆட்சியை அமைத்துள்ளது” என்று கூறினார்.
மேலும், “மக்கள் மாற்றம் வேண்டும் என்ற எண்ணத்தில், வேட்பாளர்களை கூட அறியாமல் வாக்களித்துள்ளனர். இருப்பினும், த.வெ.க-வுக்கு முழுமையான பெரும்பான்மை அளிக்காமல், எதிர்க்கட்சிகளுக்கு 126 தொகுதிகளை வழங்கி ஜனநாயகத்தை காப்பாற்றியுள்ளனர்” என்றும் தெரிவித்தார்.
“தனிப்பெரும்பான்மை இல்லாததால் த.வெ.க அரசு தற்போது ஊசலாடும் நிலையில் உள்ளது. அமமுகவின் ஒரே எம்எல்ஏவையும் முதல்வர் விஜய் தங்களிடம் இழுத்துள்ளார்” என்று தினகரன் குற்றம்சாட்டினார்.
“இது குதிரை பேரம் இல்லை என்று அவர்கள் கூறலாம். ஆனால் அமமுக எம்எல்ஏவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டால், அது குதிரை பேரம் என்ற குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும்” என்றும் அவர் தெரிவித்தார்.
அதேபோல், “அதிமுகவை ஊழல் கட்சி என்று விமர்சித்த விஜய், தற்போது அந்தக் கட்சியின் 25 எம்எல்ஏக்களின் ஆதரவை பெற்றுள்ளார்” என்றும் கூறினார்.
“ஜெயலலிதா ஆட்சி தொடர வேண்டும் என்று நினைப்பவர்கள், அதிமுகவை அழிக்க நினைக்கும் விஜய்க்கு ஆதரவு தெரிவிப்பது எந்த வகையில் நியாயம்?” என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், “அமமுக எம்எல்ஏவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டால் நிச்சயமாக சிபிஐ விசாரணை கோருவோம். அதேபோல், அதிமுக எம்எல்ஏக்களுக்கும் அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டால் குதிரை பேரம் நடந்தது உறுதியாகிவிடும்” என்று தினகரன் எச்சரித்தார்.
தொடர்ந்து, “அதிமுகவை அழிக்கும் நோக்கில் த.வெ.க-வின் ஏஜென்ட்டாக அமைச்சர் செங்கோட்டையன் செயல்படுகிறார்” என்றும் குற்றம்சாட்டினார்.
இறுதியாக, “அதிமுகவில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்னைகளுக்கு பின்னால் பாஜவுக்கு எந்த தொடர்பும் இல்லை” என்றும் தினகரன் தெரிவித்தார்.
