சென்னை அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் இருந்து 10க்கும் மேற்பட்ட ஹார்ட் டிஸ்க்குகள் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காணாமல் போன ஹார்ட் டிஸ்க்குகளில் நிலக்கரி கொள்முதல் உள்ளிட்ட முக்கிய நிர்வாகத் தகவல்கள் இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. கடந்த மே 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் அலுவலகத்தில் குறைந்த எண்ணிக்கையிலான பணியாளர்கள் மட்டுமே பணியாற்றியிருந்ததால், அந்நாட்களில் திருட்டு நடைபெற்றிருக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், மின்வாரியத்தில் எத்தனை ஹார்ட் டிஸ்க்குகள் திருடப்பட்டுள்ளன என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அமைச்சர் Nirmal Kumar தெரிவித்தார்.
மேலும், அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்ட பின்னரே இந்த திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளதாகவும், முறைகேடு தொடர்பான விசாரணைகள் தொடங்கிய பின்னர் இந்த சம்பவம் நடந்துள்ளதாகவும் அவர் கூறினார். ஒப்பந்த தொழிலாளர் நியமனம் தொடர்பான ஹார்ட் டிஸ்க்குகளும் காணாமல் போயுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்த காலகட்டத்தில் நடைபெற்றதாக கூறப்படும் டிரான்ஸ்பார்மர் முறைகேடுகள் தொடர்பான ஆவணங்கள் ஏற்கனவே சிபிஐயிடம் வழங்கப்பட்டுள்ளதாகவும், ஹார்ட் டிஸ்க் மாயமான விவகாரத்தில் மின்வாரிய அதிகாரிகளின் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இதற்கிடையில், உதவி பொறியாளர் மலர்விழி அளித்த புகாரின் பேரில், இந்த வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் ஒப்பந்த ஊழியர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் யாருடைய அறிவுறுத்தலின் பேரில் ஹார்ட் டிஸ்க்குகளை எடுத்தார், இதற்காக பணம் வழங்கியவர்கள் யார் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
ஹார்ட் டிஸ்க்குகள் காணாமல் போன சம்பவத்தைத் தொடர்ந்து, மீதமுள்ள ஆவணங்கள் மற்றும் கோப்புகளை பாதுகாப்பாக பராமரிப்பது தொடர்பாக அமைச்சர் நிர்மல்குமார் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மின்வாரிய உயரதிகாரிகள் பங்கேற்றனர். அப்போது, முக்கிய ஆவணங்கள் மற்றும் கோப்புகளை பாதுகாப்பதில் கூடுதல் கவனம் செலுத்துமாறு அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.
