புதுடெல்லி: மதம் சார்ந்த நடைமுறைகள் நீதித்துறை ஆய்வுக்கு உட்பட்டவை என்றும், நம்பிக்கை சார்ந்த விஷயங்களில் தீர்ப்பு வழங்கும் போது நீதிபதிகள் தனிப்பட்ட மத நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்டு அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையில் செயல்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலில் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களையும் அனுமதிக்கலாம் என 2018ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்கள் பின்னர் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டன.
தற்போது, தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு, சபரிமலை விவகாரம் மட்டுமல்லாமல், மசூதிகளில் பெண்கள் அனுமதி மற்றும் பார்சி பெண்களின் உரிமைகள் உள்ளிட்ட பரந்த மத சுதந்திரக் கேள்விகளை ஆய்வு செய்து வருகிறது.
விசாரணையின் போது, மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவான், “சட்டம் அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். சமூகத்தில் ஏற்படும் பிரிவினைகளை ஒருங்கிணைப்பதே நீதிமன்றத்தின் பங்கு” என வாதிட்டார்.
மற்றொரு வழக்கறிஞர், மத சுதந்திரம் மற்றும் நடைமுறைகள் தொடர்பாக சட்டப்பிரிவுகள் தெளிவாக விளக்கப்பட வேண்டும் என்றும், மதச் செயல்பாடுகளில் தேவையற்ற தலையீடு தவிர்க்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.
இதனைத் தொடர்ந்து நீதிபதிகள், “ஒரு மத நடைமுறையை அந்த மதத்தைச் சாராதவர் கேள்வி எழுப்ப முடியுமா?” போன்ற முக்கிய கேள்விகளை முன்வைத்தனர்.
மேலும், மனசாட்சி சுதந்திரம் தனிநபரின் உரிமையாக இருந்தாலும், அது அரசியலமைப்பு சட்டத்தின் பரந்த கட்டமைப்புக்குள் தான் இருக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் வலியுறுத்தினர்.
இந்த வழக்கில் தொடர்ந்து வாதங்கள் முன்வைக்கப்பட்டு வருவதால், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
