புதுடில்லி,
மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் டில்லியில் போராட்டம் நடத்தினர்.
சமீபத்தில் பாராளுமன்றத்தில் மகளிர் இடஒதுக்கீடு தொடர்பான அரசியலமைப்பு திருத்த மசோதா நிறைவேறாத நிலையில், இது குறித்து அரசியல் விவாதம் தீவிரமடைந்துள்ளது.
இதற்கிடையில், பிரதமர் நரேந்திர மோடி தனது உரையில், இந்த மசோதா தோல்விக்கு எதிர்க்கட்சிகளே காரணம் என கூறியிருந்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மகளிர் காங்கிரசார் டில்லியில் பேரணி நடத்தினர். காங்கிரஸ் அலுவலகத்தில் இருந்து பாஜ அலுவலகம் வரை அவர்கள் நடைபயணம் மேற்கொண்டனர்.
டில்லி காங்கிரஸ் தலைவர் தேவேந்தர் யாதவ் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது: 2023ஆம் ஆண்டு மசோதா முன்வைக்கப்பட்டபோதே, தற்போதைய லோக்சபா அமைப்பின் அடிப்படையில் அதை அமல்படுத்த வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை வைத்தது. ஆனால், அந்த கோரிக்கை புறக்கணிக்கப்பட்டதாக தெரிவித்தார்.
மேலும், நீண்ட கால தாமதத்திற்கு பிறகு மத்திய அரசு இந்த மசோதாவை அவசரமாக கொண்டு வந்ததற்கான காரணம் என்ன என அவர் கேள்வி எழுப்பினார்.
எதிர்க்கட்சிகள் மொத்தமாக இந்த மசோதாவை ஆதரித்த போதிலும், அதை நடைமுறைப்படுத்துவதில் தாமதம் ஏற்படுகிறது என்றும் குற்றம்சாட்டினார்.
உண்மையில் பெண்கள் முன்னேற்றத்திற்கு அக்கறை இருந்தால், தற்போதைய 543 தொகுதிகளுக்குள் மகளிர் இடஒதுக்கீட்டை மத்திய அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
