சென்னை,
சோதனை என்ற பெயரில் வருமான வரித்துறையினர் தன்னை வீட்டில் சிறைப்பிடித்து வைத்திருப்பதாக செல்வப்பெருந்தகை கூறிய நிலையில், சோதனையே நடத்தவில்லை என்று வருமான வரித்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. இதனால் அவரது குற்றச்சாட்டு சில மணி நேரங்களிலேயே அம்பலமாகியுள்ளது.
தமிழக காங்கிரஸ் தலைவராக உள்ள செல்வப்பெருந்தகை, கீழ்பாக்கத்தில் வசித்து வருகிறார். இன்று (ஏப்ரல் 20) காலை முதல் தனது வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள் என்றும், ‘சோதனை என்ற பெயரில் தன்னை சிறைப்பிடித்துள்ளனர்’ என்றும் அவர் சமூக வலைதளத்தில் பதிவு செய்தார்.
அவர் வெளியிட்ட பதிவில், தமிழகத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள வந்துள்ள நிலையில், ஹிந்தி பேசும் அதிகாரிகளை கொண்டு ஸ்ரீபெரும்புதூர் சட்டசபை தொகுதிக்குள் தன்னை சட்டவிரோதமாக முடக்கியதாகவும் குற்றம் சாட்டினார்.
மேலும், பிரசாரத்திற்கு செல்ல விடாமல் தனது அரசியல் கடமைகளை செய்ய தடையாக இருந்ததாகவும், மத்திய விசாரணை அமைப்புகளை அரசியல் அழுத்த கருவிகளாக பயன்படுத்துவது கவலை அளிக்கிறது என்றும், இது அரசியல் உள்நோக்கம் கொண்ட செயல் என்றும் அவர் கண்டனம் தெரிவித்தார். இதே குற்றச்சாட்டை அவர் வீட்டிற்கு வெளியே நின்று பேட்டியிலும் கூறினார்.
ஆனால், சில மணி நேரங்களிலேயே வருமான வரித்துறை இந்த குற்றச்சாட்டை முற்றிலும் மறுத்தது. தாங்கள் எந்த சோதனையும் நடத்தவில்லை என்றும், அவர் கூறியதில் உண்மை இல்லை என்றும் தெளிவுபடுத்தியது.
