Bengaluruவில் தனியார் நிறுவன ஊழியர்களின் குழந்தைகளுக்காக செயல்பட்டு வந்த ஒரு குழந்தைகள் காப்பகத்தில், குழந்தைகள் துன்புறுத்தப்பட்டதாக வெளியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
சமூக வலைதளங்களில் வைரலான காட்சிகளில், அழும் குழந்தைகளை முன்பக்க திறப்புடைய வாஷிங்மெஷினுக்குள் அமரவைத்தல், கழிப்பறைக்குள் அடைத்து வைத்தல் மற்றும் ஜெட் ஸ்பிரே மூலம் குழந்தைகளுக்கு தண்ணீர் பீய்ச்சியடித்தல் போன்ற கொடுமைகள் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.
இந்த காட்சிகள் வெளியாகியதைத் தொடர்ந்து, பெங்களூர் காவல்துறை உடனடியாக விசாரணையை தொடங்கி, சம்பந்தப்பட்ட குழந்தைகள் காப்பகத்தை மூட நடவடிக்கை எடுத்துள்ளது.
காப்பகத்தில் பணியாற்றிய ஐந்து பெண்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. குழந்தைகளின் பெற்றோரிடமும் காவல்துறை வாக்குமூலம் பெற்று, சம்பவத்தின் முழு விவரங்களையும் சேகரித்து வருகிறது.
குழந்தைகளை ஒழுங்குபடுத்தும் பெயரில் இத்தகைய செயல்கள் நடந்ததாக கூறப்படும் நிலையில், சமூக வலைதளங்களில் வெளியான காட்சிகள் பொதுமக்கள் மற்றும் பெற்றோர்களிடையே கடும் அதிர்ச்சியையும் கண்டனத்தையும் ஏற்படுத்தியுள்ளன.
