பாட்னா: பீஹார் முதல்வராக இருந்த Nitish Kumar தனது பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து, பாஜவைச் சேர்ந்த Samrat Choudhary புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ராஜ்யசபா எம்பியாக தேர்வான நிதிஷ்குமார், தனது ராஜினாமா கடிதத்தை பீஹார் கவர்னர் Syed Abdul Nazeer அவர்களிடம் சமர்ப்பித்தார்.
பீஹாரில் கடந்தாண்டு இறுதியில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் – பாஜ கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இந்த தேர்தலில் பாஜ அதிக இடங்களில் வெற்றி பெற்றிருந்தாலும், ஐக்கிய ஜனதா தளத்தின் நிதிஷ்குமார் முதல்வராக பதவியேற்றார். அதே நேரத்தில், விரைவில் பாஜ தலைமையில் ஆட்சி அமையும் என்ற அரசியல் பேச்சுகளும் நிலவின.
இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற ராஜ்யசபா தேர்தலில் நிதிஷ்குமார் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து அவர் எம்பியாக பதவியேற்றுக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து, முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்து, அமைச்சரவை கூட்டத்திற்குப் பிறகு கவர்னரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கினார். புதிய அரசு வளர்ச்சி பணிகளை மேற்கொள்ளும் என்றும், அதற்கு தனது ஒத்துழைப்பும் ஆலோசனையும் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
நிதிஷ்குமார் ராஜினாமாவைத் தொடர்ந்து, பாஜ எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் எம்எல்ஏக்கள் குழுத் தலைவராக சாம்ராட் சவுத்ரி தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம் அவர் புதிய முதல்வராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
அவர் முறைப்படி நாளை பதவியேற்க உள்ளார். முன்னதாக, நிதிஷ்குமார் அமைச்சரவையில் சாம்ராட் சவுத்ரி துணை முதல்வராக பதவி வகித்தார்.
