பாட்னா: பீஹாரில் பயணிகள் ரயிலில் திடீரென தீப்பற்றிய சம்பவம் பயணிகளிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
சசாரம் – பாட்னா பயணிகள் ரயில் இன்று அதிகாலை 6 மணியளவில் பீஹாரின் சசாரம் ரயில் நிலையத்தை வந்தடைந்தது. அப்போது திடீரென ரயிலின் ஒரு பகுதியில் தீப்பற்றி எரிந்ததாக கூறப்படுகிறது.
இதைக் கண்ட பயணிகள் அதிர்ச்சியடைந்து அலறியடித்தபடி ரயிலில் இருந்து வெளியேறினர். சம்பவம் குறித்து உடனடியாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர், தீ மேலும் பரவாமல் தடுத்து விரைவாக கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்பட்டதாக இதுவரை தகவல் வெளியாகவில்லை. அதிர்ஷ்டவசமாக பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் குறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, நேற்று அதிகாலை திருவனந்தபுரத்தில் இருந்து டெல்லி சென்ற ராஜதானி விரைவு ரயிலிலும் தீ விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
