புதுடெல்லி: லோக்சபாவில் நடைபெற்ற விவாதத்தின் போது, மத்திய உள்துறை அமைச்சர் Amit Shah, நாட்டில் பிரிவினைவாத அரசியல் எடுபடாது என்றும், வடக்கு–தெற்கு பிரிப்பு அரசியலை ஏற்க முடியாது என்றும் தெரிவித்தார்.
மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை மசோதாக்கள் குறித்த விவாதத்துக்கு பதிலளித்த அவர், இந்த மசோதாக்களின் நோக்கம் 2029 லோக்சபா தேர்தலுக்குள் பெண்களுக்கு இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதாகும் என்றார்.
எதிர்க்கட்சிகள் இந்த மசோதாக்களை அமல்படுத்தும் முறையைக் காரணமாக கூறினாலும், உண்மையில் அவர்கள் பெண்களுக்கு இடஒதுக்கீட்டை எதிர்க்கிறார்கள் என அவர் குற்றம்சாட்டினார். மேலும், பட்டியலின மக்களுக்கான தொகுதிகளை அதிகரிக்கும் முயற்சிகளையும் சிலர் தடுக்கின்றனர் என்றும் கூறினார்.
தொகுதி மறுவரையறை அவசியம் என்பதை விளக்கிய அவர், தற்போது பல தொகுதிகளில் மக்கள் தொகையில் பெரிய வேறுபாடு இருப்பதால் சமநிலை ஏற்படுத்துவது முக்கியம் என்றார்.
தமிழகத்தில் தொகுதிகள் குறையும் என்ற அச்சம் தேவையில்லை என்றும், மாநிலங்களுக்கு இடையில் எந்த பாகுபாடும் இல்லை என்றும் அவர் உறுதி அளித்தார். தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையாது என எழுத்துப்பூர்வமாக உறுதி அளிக்க தயார் என்றும் தெரிவித்தார்.
மேலும், மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பிறகு ஜாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தப்படும் என்றும் கூறினார்.
மக்களிடையே தேவையற்ற பயத்தை எதிர்க்கட்சிகள் உருவாக்குகின்றன என்றும், மகளிர் இடஒதுக்கீட்டை புறக்கணிப்பவர்களுக்கு மக்கள் பதிலளிப்பார்கள் என்றும் அமித்ஷா தெரிவித்தார்.
