சென்னை: 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில், கடந்த 2021 தேர்தலில் போட்டியிடாத 19 புதிய தொகுதிகளில் பாஜ இந்த முறை களம் இறங்குகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் இன்று வெளியிட்ட கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் பட்டியலில், பாஜவுக்கு மொத்தம் 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் பாஜ 20 தொகுதிகளில் போட்டியிட்டது. அதில் திருநெல்வேலி, நாகர்கோவில், மொடக்குறிச்சி, கோவை தெற்கு ஆகிய 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இம்முறை அந்த 4 தொகுதிகளில் மொடக்குறிச்சி மற்றும் நாகர்கோவில் ஆகிய 2 தொகுதிகள் மட்டுமே பாஜவுக்கு மீண்டும் வழங்கப்பட்டுள்ளன.
மீதமுள்ள கோவை தெற்கு மற்றும் திருநெல்வேலி ஆகிய 2 தொகுதிகளை அதிமுக தக்க வைத்துக் கொண்டுள்ளது.
மேலும், 2021ல் போட்டியிட்ட 20 தொகுதிகளில் துறைமுகம், ஆயிரம் விளக்கு, திருக்கோயிலூர், திட்டக்குடி, கோவை தெற்கு, விருதுநகர், அரவக்குறிச்சி, திருவையாறு, திருநெல்வேலி, காரைக்குடி, தாராபுரம், மதுரை வடக்கு உள்ளிட்ட 12 தொகுதிகள் இம்முறை பாஜவுக்கு வழங்கப்படவில்லை.
அவற்றிற்கு பதிலாக, மயிலாப்பூர், அவினாசி, திருப்பூர் தெற்கு, கோவை வடக்கு, கந்தர்வக்கோட்டை (தனி), புதுக்கோட்டை, திருப்பத்தூர், மதுரை தெற்கு, சாத்தூர், திருச்செந்தூர், வாசுதேவநல்லூர் (தனி), ராதாபுரம், ஆவடி, தஞ்சாவூர், திருவாரூர், அறந்தாங்கி, மானாமதுரை (தனி), பத்மநாபபுரம், ராசிபுரம் (தனி) ஆகிய 19 புதிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்த புதிய 19 தொகுதிகளும் கடந்த தேர்தலில் அதிமுக போட்டியிட்ட பகுதிகளாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
