நாகர்கோவில்: பழனிசாமியின் மனம் துரோகம் நிறைந்த நஞ்சால் நிரம்பியுள்ளது என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கடுமையாக விமர்சித்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அவர் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், வெளியுறவு கொள்கையை கையில் வைத்திருக்கும் மத்திய பா.ஜ. அரசு, மீனவர்களை பாதுகாக்க தவறி விட்டதாக குற்றம்சாட்டினார். இலங்கை கடற்படையால் மீனவர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்கின்றன என்றும் அவர் கூறினார்.
காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் மன்மோகன் சிங் பலவீனமான பிரதமர் என கூறிய மோடி, தற்போதைய நிலை குறித்து என்ன பதில் கூறுவார் எனவும் கேள்வி எழுப்பினார்.
மேலும், மதுரை எய்ம்ஸ், கோவை மற்றும் மதுரை மெட்ரோ திட்டங்கள், ஓசூர் விமான நிலையம் போன்ற பல்வேறு திட்டங்கள் குறித்து மத்திய அரசிடம் கேட்க வேண்டிய கேள்விகள் உள்ளதாக தெரிவித்தார்.
சிறுபான்மையினரை, குறிப்பாக கிறிஸ்துவ அமைப்புகளை குறிவைத்து வெளிநாட்டு நிதி பங்களிப்பு சட்டத்திருத்தம் கொண்டு வரப்படுவதாகவும், இதனால் கல்வி மற்றும் மருத்துவ நிறுவனங்கள் பாதிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இந்த சட்டத்தின் மூலம் சிறிய தவறுகளுக்கே அமைப்புகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் அபாயம் உள்ளதாகவும், இது மனிதநேய செயல்பாடுகளுக்கு எதிரான நடவடிக்கை என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும், இதில் அ.தி.மு.க. நிலைப்பாடு என்ன என்பதை பழனிசாமி விளக்க வேண்டும் என்றும் கூறினார்.
மேலும், கருணாநிதி குறித்து பழனிசாமி பேசியதை கண்டித்த அவர், மறைந்த தலைவர்களை விமர்சிப்பது அரசியல் நாகரிகமல்ல என்றார். ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது அவரை நேரடியாக அரசியல் ரீதியாக எதிர்த்தோம் என்றும் நினைவுபடுத்தினார்.
“திடீரென உயர்ந்தவரிடம் அரசியல் நாகரிகம் எதிர்பார்க்க முடியாது. நன்றி உணர்ச்சி இல்லாமல், பழனிசாமியின் மனம் துரோகம் நிறைந்துள்ளது,” என்று அவர் கடுமையாக விமர்சித்தார்.
