சென்னை திரு.வி.க.நகர் பகுதியில் நடைபெற்ற மாநகராட்சி பள்ளி புதிய கட்டட திறப்பு விழாவில், சென்னை மேயர் R. Priya மற்றும் த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் Pallavi ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திரு.வி.க.நகர் நம்மாழ்வார்பேட்டையில் ரூ.2.20 கோடி மதிப்பில் கட்டப்பட்ட மாநகராட்சி தொடக்கப்பள்ளியின் புதிய கட்டடங்கள் நேற்று திறந்து வைக்கப்பட்டன. நிகழ்ச்சியின் போது மேயர் பிரியா ரிப்பன் வெட்டி கட்டடத்தை திறந்து வைக்க முயன்ற நிலையில், அருகில் நின்றிருந்த எம்.எல்.ஏ. பல்லவி ரிப்பனை வெட்டியதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து மேயர் பிரியா குத்துவிளக்கேற்றினார். பின்னர் குத்துவிளக்கேற்ற தயாராக இருந்த எம்.எல்.ஏ. பல்லவி, மெழுகுவர்த்தியை பெற முயன்றபோது, அதை மேயர் பிரியா மாநகராட்சி இணை ஆணையர் கற்பகத்திடம் வழங்கியதாக கூறப்படுகிறது.
இதனால் அதிருப்தியடைந்த எம்.எல்.ஏ. பல்லவி, தனது ஆதரவாளர்களுடன் நிகழ்விடத்தை விட்டு வெளியேறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பின்னர் மற்றொரு பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மேயர் பிரியா குத்துவிளக்கேற்றிய பின், எம்.எல்.ஏ. பல்லவியையும் விளக்கேற்ற அழைத்தார். ஆனால், அவர் மெழுகுவர்த்தியை பெற மறுத்ததுடன், மீண்டும் அழைக்கப்பட்டபோது கையெடுத்து கும்பிட்டு மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்த மேயர் பிரியா, எம்.எல்.ஏ.வை புறக்கணிக்கும் நோக்கம் எதுவும் இல்லை என்றும், நடைமுறைப்படி மேயருக்குப் பிறகு அதிகாரிகள் விளக்கேற்றுவது வழக்கம் என்றும் தெரிவித்தார். எம்.எல்.ஏ.வுக்கு உரிய மரியாதை வழங்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
மறுபுறம், எம்.எல்.ஏ. பல்லவி, நிகழ்ச்சியின் தொடக்கம் முதலே தன்னை புறக்கணிக்கும் வகையில் நடந்து கொள்ளப்பட்டதாக குற்றம்சாட்டினார். மேலும், குத்துவிளக்கேற்றும் நிகழ்வில் வேண்டுமென்றே தன்னை தவிர்த்ததாகவும், தொகுதியில் நடைபெறும் பணிகள் தொடர்பாகவும் அதிருப்தி இருப்பதாகவும் தெரிவித்தார்.
பள்ளி கட்டட திறப்பு விழாவில் ஏற்பட்ட இந்த சம்பவம் அரசியல் வட்டாரங்களில் விவாதப்பொருளாக மாறியுள்ளது.
