Kerala மாநிலத்தின் நிதி நிலை தொடர்பான வெள்ளை அறிக்கையை, நிதித் துறையையும் கவனித்து வரும் முதல்வர் V. D. Satheesan சட்டசபையில் நேற்று தாக்கல் செய்தார். அதில் மாநிலத்தின் மொத்த கடன் சுமை ரூ.5.07 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணி 140 தொகுதிகளில் 102 இடங்களில் வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியை கைப்பற்றியது. அதன் பின்னர் முதல்வராக பதவியேற்ற வி.டி. சதீசன், மாநிலத்தின் நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என ஏற்கனவே அறிவித்திருந்தார்.
சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையின்படி, மாநில வருவாயில் 77 சதவீதம் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் வட்டி செலுத்துதல் போன்ற கட்டாய செலவுகளுக்காக பயன்படுத்தப்படுகிறது. இதில் வட்டி செலுத்துவதற்கு மட்டும் 20.9 சதவீதம் செலவாகுவதால், வளர்ச்சித் திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி கணிசமாக குறைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், மாநிலம் கடுமையான நிதிப் பற்றாக்குறையை எதிர்கொண்டு வருவதாகவும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெறும் 1.3 சதவீதம் மட்டுமே மூலதனச் செலவாக இருப்பதாகவும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. தேசிய அளவில் ஒப்பிடும்போது இது மிகவும் குறைவான அளவாகும்.
அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி மற்றும் பிற நிலுவைகள் உள்ளிட்ட மொத்த பொறுப்புகள் ரூ.48,733 கோடியாக இருப்பதாகவும், புதிய அரசு அந்தச் சுமையை ஏற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Kerala Infrastructure Investment Fund Board ரூ.21,000 கோடி அளவிலான நிலுவைக் கடனை கொண்டுள்ளதாகவும், மாநில பொதுத்துறை நிறுவனங்களின் மொத்த இழப்பு ரூ.78,851 கோடியாக உயர்ந்துள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, Kerala State Road Transport Corporation மற்றும் கேரள குடிநீர் வாரியம் போன்ற நிறுவனங்களே அதிக இழப்புக்குக் காரணமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்.சி., எஸ்.டி. மற்றும் சிறுபான்மையின நலத் திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி சமீப ஆண்டுகளில் குறைந்துள்ளதாகவும், மாநில வரி வருவாய் மற்றும் மத்திய அரசின் நிதியுதவி எதிர்பார்த்த அளவுக்கு கிடைக்காததும் நிதி நெருக்கடிக்கான முக்கிய காரணங்களாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அறிக்கையை தாக்கல் செய்த பின்னர் பேசிய முதல்வர் சதீசன், இது அரசியல் உள்நோக்கம் கொண்ட ஆவணம் அல்ல என்றும், பொதுவெளியில் கிடைக்கும் தரவுகளின் அடிப்படையில் நிபுணர்களால் தயாரிக்கப்பட்ட உண்மை நிலை அறிக்கை என்றும் தெரிவித்தார். இந்த அறிக்கை கேரளாவின் எதிர்கால வளர்ச்சிக்கான ஒரு வழிகாட்டி ஆவணமாக அமையும் என்றும் அவர் கூறினார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த முன்னாள் நிதியமைச்சர் K. N. Balagopal, அறிக்கை உள்நோக்கத்துடன் தயாரிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். அதேபோல் முன்னாள் முதல்வர் Pinarayi Vijayan, இந்த வெள்ளை அறிக்கை அரசியல் ஆவணமாகவே இருப்பதாக விமர்சித்தார்.
இந்த விமர்சனங்களுக்கு பதிலளித்த முதல்வர் சதீசன், அறிக்கையை முழுமையாக படிக்காமலேயே எதிர்க்கட்சிகள் அதனை அரசியல் ஆவணம் என விமர்சிப்பது எப்படி என கேள்வி எழுப்பினார்.
