பாகிஸ்தானில் இருந்து நடைபெறும் எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்து, இந்தியா மற்றும் ஜப்பான் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன.
புதுடில்லியில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜப்பான் பிரதமர் டகாய்ச்சி இடையே நடைபெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்த கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.
அதில், ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஆண்டு ஏப்ரல் 22-ஆம் தேதி சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கும், டில்லி செங்கோட்டை அருகே நடைபெற்ற கார் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கும் இரு நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்த தாக்குதல்களுக்கு காரணமானவர்கள், திட்டமிட்டவர்கள் மற்றும் நிதியுதவி வழங்கியவர்கள் அனைவரும் தாமதமின்றி சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் கூட்டறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், ஐக்கிய நாடுகள் சபையால் தடை செய்யப்பட்டுள்ள லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது, அல்-கொய்தா மற்றும் ஐஎஸ்ஐஎஸ் உள்ளிட்ட அனைத்து பயங்கரவாத அமைப்புகள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய நபர்கள் மீது உலக நாடுகள் ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதிகளின் புகலிடங்களை முற்றிலுமாக ஒழித்தல், பயங்கரவாத நிதி ஆதாரங்களை துண்டித்தல், சர்வதேச குற்றச்செயல்களுடனான தொடர்பை முறியடித்தல் மற்றும் எல்லை தாண்டிய பயங்கரவாத நடமாட்டத்தை தடுக்க உலக நாடுகள் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்தியா-ஜப்பான் கூட்டறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
