சென்னை: தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக தயாரான 20க்கும் மேற்பட்ட அரசாணைகள், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறையில் வெளியிடப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த துறையின் கீழ் வீட்டுவசதி வாரியம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் (CMDA), நகர மற்றும் ஊரமைப்பு துறை (DTCP) உள்ளிட்ட அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இத்துறைகளுக்கான முக்கிய முடிவுகள் அனைத்தும் அரசாணைகள் மூலம் வெளியிடப்பட வேண்டும்.
தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன், நிலுவையில் இருந்த கோப்புகளை விரைவாக முடிக்க அமைச்சர்கள் உத்தரவிட்டனர். இதையடுத்து கடந்த ஒரு வாரமாக அதிகாரிகள் இரவு நேரம் வரை பணியாற்றி, 20க்கும் மேற்பட்ட அரசாணைகள் தயாரிக்கப்பட்டன.
அமைச்சரின் அனுமதி மற்றும் வரிசை எண் ஒதுக்கீடு உள்ளிட்ட செயல்முறைகள் நிறைவடைந்த நிலையில், மார்ச் 15ஆம் தேதி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன.
இந்த சூழலில், கட்டட அனுமதி, புதிய பணியிடங்கள் மற்றும் நியமனங்கள் தொடர்பான அரசாணைகளை வெளியிட துறை உயர் அதிகாரி தயக்கம் காட்டியுள்ளார். இதனால், அவை தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் கூறப்படுவதாவது, முந்தைய ஆட்சி காலங்களில் தேர்தல் காலத்தில் வெளியிடப்பட்ட அரசாணைகள் பல பிரச்சினைகளை ஏற்படுத்தியதாகவும், சில சந்தர்ப்பங்களில் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், தற்போதைய சூழலில் எந்த வித சிக்கலும் உருவாகாமல் இருக்க, அரசாணைகளை வெளியிடாமல் இருக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
