சென்னை: இலக்கிய மற்றும் கலை அமைப்புகளில் ‘அர்பன் நக்சலைட்டுகள்’ ஊடுருவியுள்ளதாக குற்றம்சாட்டி, அவற்றை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், ஹிந்து மதம் மற்றும் தெய்வங்களை இழிவுபடுத்துவதாக குற்றம்சாட்டப்பட்ட எழுத்தாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஹிந்து தேசியக் கொள்கைகளை விமர்சித்து கருத்து வெளியிட்டவர்களுக்கு முக்கிய விருதுகள் வழங்கப்படுவது சர்ச்சைக்குரியது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இலக்கியம், சினிமா, கலை மற்றும் கலாசார அமைப்புகளில் திராவிட, கம்யூனிஸ்ட் மற்றும் நக்சல்வாத சிந்தனைகள் ஊடுருவியுள்ளதாகவும், அவை நாட்டிற்கு ஆபத்தாக மாறக்கூடும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஞானபீட விருது மற்றும் சாகித்ய அகாடமி போன்ற அமைப்புகள் பிரிவினைவாத சிந்தனையால் பாதிக்கப்பட்டுள்ளன எனவும் குற்றம்சாட்டினார்.
இதையடுத்து, இலக்கிய அமைப்புகளில் உள்ள ‘அர்பன் நக்சலைட்டுகளை’ ஒழிக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், குறிப்பிட்ட எழுத்தாளர்களுக்கு வழங்கப்பட்ட விருதுகளை திரும்பப் பெறவும், மத அவமதிப்பு மற்றும் தேச விரோத கருத்துகள் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
