தவெக அரசுக்கு ஆதரவு குறித்து ஆலோசிப்போம்: திருமாவளவன்
சென்னை: தவெக அரசுக்கு அதிமுக அணி ஆதரவு அளித்துள்ள நிலையில், விசிகவின் ஆதரவு நிலைப்பாடு குறித்து உயர்நிலைக் குழுவில் ஆலோசிக்கப்படும் என Thol. Thirumavalavan தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி வரக்கூடாது, மீண்டும் தேர்தல் நடைபெறக்கூடாது என்பதற்காகவே தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்துள்ளோம். இதில் எந்த ரகசியமும் இல்லை; அனைத்தும் வெளிப்படையாகவே நடந்துள்ளது,” என்றார்.
மேலும், “நாங்கள் தற்போதும் திமுக கூட்டணியில்தான் உள்ளோம். அவர்கள் எப்போது அழைத்தாலும் ஆலோசனை நடத்த தயாராக இருக்கிறோம்,” என்றும் தெரிவித்தார்.
விசிக யாருடனும் பேரம் பேசவில்லை என்றும், திமுக – அதிமுக கூட்டணி தொடர்பாக தன்னிடம் யாரும் நேரடியாக பேசவில்லை என்றும் அவர் கூறினார்.
“என்னை முதல்வராக்க வேண்டும் என்று திமுக அல்லது அதிமுக அதிகாரப்பூர்வமாக அணுகவில்லை. சில நலவிரும்பிகள் மட்டும் கருத்து தெரிவித்தனர். இரண்டு இடங்களை வைத்துக்கொண்டு யாரிடமும் பேரம் பேச வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை,” என்றும் திருமாவளவன் கூறினார்.
தவெக அரசை வெளியில் இருந்து ஆதரிப்பது இயல்பாக நடந்த ஒன்று என்றும், அதை காலதாமதம் அல்லது ரகசிய ஒப்பந்தம் போல சித்தரிக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், “தவெக பாஜ ஆதரவு கட்சி என்றே நான் முன்பும் விமர்சித்துள்ளேன். அந்த கருத்தில் எந்த மாற்றமும் இல்லை,” என்றும் தெரிவித்தார்.
“தமிழகம் சமூகநீதி மண் என்று கூறப்பட்டாலும், பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவர் முதல்வராகுவது இன்னும் எளிதல்ல,” எனவும் அவர் குறிப்பிட்டார்.
அதிமுகவை ஊழல் கட்சி என முதல்வர் Vijay விமர்சித்துள்ள நிலையில், அந்தக் கட்சி பாஜ கூட்டணியில் தீவிர நட்புடன் இருப்பதாகவும் திருமாவளவன் தெரிவித்தார்.
அதிமுகவிலிருந்து சிலர் தவெகவுக்கு ஆதரவு அளிப்பதில் தங்களுக்கு நேரடி பிரச்னை இல்லை என்றாலும், தற்போதைய அரசியல் சூழ்நிலையில் தவெகவுக்கு வழங்கி வரும் ஆதரவை தொடர்வதா என்பது குறித்து விசிக உயர்நிலைக் குழுவில் நிச்சயம் ஆலோசிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
