சென்னை: “தமிழகத்தில் நடந்தது அரசியல் சுனாமி அல்ல; சினிமா சுனாமி” என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், தமிழக வெற்றிக் கழக அரசு ஐந்தாண்டுகள் முழுமையாக நீடிக்காது என்றும் அவர் விமர்சித்தார்.
சென்னை அறிவாலயத்தில் நேற்று நடைபெற்ற திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், “சினிமா கவர்ச்சியின் காரணமாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் முதல்வராகியுள்ளார். இந்த தேர்தலில் ஏற்பட்ட மாற்றம் அரசியல் சுனாமி அல்ல; சினிமா சுனாமி” என்றார்.
மேலும், “நிச்சயமாக த.வெ.க அரசு ஐந்தாண்டுகள் நீடிக்காது” என்றும் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து பேசுகையில், “புதிய பொம்மையை பார்த்த குழந்தை அதை வேண்டுமென பிடிவாதம் பிடிக்கும். ஆனால் சில நாட்களில் அதே பொம்மை அலுப்பை தரும். அதுபோல நடிகரை பார்த்து சென்ற தமிழக மக்கள் மீண்டும் தாயிடம் திரும்புவது போல திமுகவிடம் திரும்பி வருவார்கள்” என்று கூறினார்.
திமுகவின் தோல்விக்கு பலரும் வருத்தப்படுவதாக கூறிய ஸ்டாலின், “திமுக என்ற பேரியக்கத்தின் எதிர்காலம் இளைஞர்களின் கைகளில் உள்ளது. காலத்திற்கேற்ப கட்சியின் திட்டங்களையும் செயல்முறைகளையும் மேம்படுத்த வேண்டும்” என்றார்.
மேலும், சமூக வலைதளங்களை திறம்பட பயன்படுத்த வேண்டும் என்றும், இளைஞர்களிடம் நேரடியாகவும் சமூக வலைதளங்கள் மூலமாகவும் ஆக்கப்பூர்வமான விவாதங்களை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
