உண்மையான கல்வித் தகுதியை மறைத்து வேலை பெறுவது, அந்த பணிக்காக தகுதியுடன் காத்திருக்கும் மற்றவர்களின் உரிமையை பறிக்கும் செயலாகும் என்று உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
சிண்டிகேட் வங்கியில் தற்காலிக வங்கி உதவியாளராக பணியாற்றிய ஒருவர், தாம் பட்டதாரி என்ற விவரத்தை மறைத்து, 10ஆம் வகுப்பு கல்வித் தகுதி கொண்டவர்களுக்காக ஒதுக்கப்பட்ட பணியிடத்தில் நியமனம் பெற்றிருந்தார்.
இந்த விவகாரம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் Ahsanuddin Amanullah மற்றும் P. B. Balaji Mahadevan அடங்கிய அமர்வு, பணியில் சேர்ந்தபோது தனது உயர்கல்வித் தகுதியை மறைத்த நபரின் பணிநீக்க நடவடிக்கையை உறுதி செய்து தீர்ப்பளித்தது.
தீர்ப்பில், குறைந்த கல்வித் தகுதி கொண்டவர்களுக்கு வாய்ப்பு வழங்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட பணியிடங்களில், அதிக கல்வித் தகுதி கொண்டவர்கள் தங்களது உண்மையான தகுதியை மறைத்து பணியில் சேருவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
மேலும், இத்தகைய செயல்கள் அந்தப் பணிக்காக விண்ணப்பிக்கும் தகுதியான மற்ற நபர்களின் வேலைவாய்ப்பு உரிமையை பறிக்கும் செயலாக கருதப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
குறைந்த கல்வித் தகுதி கொண்டவர்களுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட பணியிடங்களுக்கு, அதிக கல்வித் தகுதி பெற்றவர்களை பரிசீலிக்க முடியாது என்றும், பணியாளர் தேர்வில் வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மையை கடைப்பிடிப்பது அவசியம் என்றும் நீதிபதிகள் வலியுறுத்தினர்.
