புதுடெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற இரண்டாம் கட்ட பத்ம விருதுகள் வழங்கும் விழாவில், ஜனாதிபதி திரவுபதி முர்மு பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய 65 பேருக்கு உயரிய குடிமக்கள் விருதுகளை வழங்கினார்.
மத்திய அரசு ஆண்டுதோறும் கலை, இலக்கியம், விளையாட்டு, அறிவியல், மருத்துவம், சமூக சேவை உள்ளிட்ட துறைகளில் சிறப்பான பங்களிப்பை வழங்கியவர்களை கவுரவிக்கும் வகையில் பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்மஸ்ரீ விருதுகளை வழங்கி வருகிறது. கடந்த மே 25-ஆம் தேதி முதல் கட்டமாக 65 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்ட நிலையில், தற்போது இரண்டாம் கட்டமாக மேலும் 65 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
இந்த விழாவில் மலையாள நடிகர் மம்முட்டி, பாடகி அல்கா யாக்னிக், டென்னிஸ் வீரர் விஜய் அமிர்தராஜ், ஈரோட்டைச் சேர்ந்த எஸ்.கே.எம். மயிலானந்தன் உள்ளிட்டோர் பத்ம பூஷண் விருதைப் பெற்றனர். மறைந்த சிபு சோரனுக்கு அறிவிக்கப்பட்ட பத்ம பூஷண் விருதை அவரது மனைவி ரிபு சோரன் பெற்றுக்கொண்டார்.
பத்மஸ்ரீ விருது பெற்றவர்களில் சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி, நடிகர் மாதவன், கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா, கர்நாடக இசைக் கலைஞர்கள் ரஞ்சனி–காயத்ரி, சேலம் சிற்பக் கலைஞர் ராஜா ஸ்தபதி, கால்நடை மருத்துவ ஆராய்ச்சியாளர் டாக்டர் புண்ணியமூர்த்தி நடேசன், அரங்க வடிவமைப்பாளர் நூருதீன் அகமது மற்றும் வேளாண் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ராமசாமி ஆகியோர் இடம்பெற்றனர்.
மேலும், கலை மற்றும் கல்வித் துறைக்காக பி. நாராயணனுக்கும், பொதுவாழ்வில் சிறந்த சேவைக்காக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.டி. தாமஸுக்கும் பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது.
